கோதுமையை சரியான பருவம் தெரிந்து பயிரிட்டால் நீங்கள் லாபம் அடைவதை தடுக்க முடியாது…
தென்னிந்திய மக்களின் மாறி வரும் உணவுப் பழக்கத்தின் காரணமாக கோதுமையின் தேவை அதிகரித்துள்ளது. இத்தேவை வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோதுமையை பயிரிட அரசு வேளாண்மை துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோதுமையில் ரொட்டி கோதுமை, சம்பா கோதுமை என இரண்டு ரகங்கள் உள்ளன.
ரொட்டி கோதுமை கோ டபிள்யு (டபிள்யு 1), சம்பா கோதுமையில் டி.என்.ஏ.யூ., கோ டபிள்யூ 2 என ரகங்கள் உள்ளன.
இவற்றின் வயது 110 முதல் 115 நாள்கள் ஆகும். தென்னிந்திய பகுதிகளில் ஆண்டு முழுவதும் கோதுமையை பயிரிடலாம். இருப்பினும் ஐப்பசி பட்டம் உகந்தது என்பர்.
இந்த மார்கழி பருவத்திலும் கோதுமையை பயிரிடலாம்.
விதைப்பு:
காய்கறி விளைவிக்கப்பட்ட நிலங்களில், கோதுமை பயிரிடப்பட்டால் நிலத்தை அதிகம் பண்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
பண்படுத்திய நிலத்தை 23 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்தில் நேர்கோட்டில் தொடர்ந்து விதைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ விதை போதுமானது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய்களைத் தவிர்க்க, ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் பெவிஸ்டின் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.
வரிக்கு வரி இடைவெளி 23 செ.மீ. என்ற அளவில் கையினாலோ அல்லது விதைப்பான் மூலமோ விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
பின்னர் வரிகள் மூடப்பட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும்.
உரஅளவு:
ஹெக்டேருக்கு 100 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து 30 கிலோ சாம்பல் சத்து இடலாம். எனினும் மண் பரிசோதனைக்கு பின்னர் உர அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் பாதியளவு தழைச்சத்தும், முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை அடி உரமாக இட வேண்டும்.
பாசன முறை:
கோதுமை பயிருக்கு குறைந்தது ஐந்து முறை பாசனம் அவசியமாகிறது. மழைக் காலங்களில் சில பாசனங்களை தவிர்க்கலாம்.
விதைத்த உடன், 15-20 நாள்களுக்குள், 35-40 நாள்களுக்குள், 50-55 நாள்களுக்குள் (பூக்கும் பருவம்), 70-75 நாள்களுக்குள் (பால் பிடிக்கும் பருவம்) தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
களை எடுத்தல்:
களைகொத்து மூலம் விதைத்த 20-25 நாள்களுக்குள் களை எடுக்க வேண்டும். 40-45 நாள்களுக்குப் பிறகு கையினால் களை எடுத்தல் அவசியம். 60-65 நாள்களுக்கு பிறகு மீண்டும் கையினால் களை எடுக்க வேண்டும்.
முளைப்புக்கு முன்பாக, முதல் தண்ணீர் பாய்ச்சியவுடன் களைக் கொல்லியையும் பயன்படுத்தலாம்.
பயிர் பாதுகாப்பு:
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரகங்கள் துருநோய் எதிர்ப்புத் திறன் கொண்டவை. எனவே பூஞ்சாணக் கொல்லிகள் தேவைபடுவதில்லை. எனினும் பால் பிடிக்கும் பருவத்தில் மழை இருக்குமானால் கான்டாப் (எக்ஸ்கோனசோல்) ஒரு முறை தெளிப்பதன் மூலம் கதிர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தி விதையின் தரத்தை உயர்த்தலாம்.
அறுவடை:
முதிர்ந்த கதிரைப் பிடுங்கி எடுத்தோ, அரிவாளைக் கொண்டோ அறுத்தெடுக்கலாம். கதிர் அடிப்பான் கொண்டு கதிரை அடிக்க வேண்டும். அல்லது பழைய முறைகளை கொண்டு தாளடித்தல், டிராக்டர் மூலம் தாளடித்தல், கோணிப் பையில் இட்டு மட்டை கொண்டு அடித்தல் போன்ற முறைகளை பின்பற்றலாம்.
விளைச்சல்:
சிறப்பாக பராமரிக்கப்படும் ரொட்டி கோதுமை, ஹெக்டேருக்கு 4,500 கிலோ முதல் 5,500 கிலோ வரை விளையும். சம்பா கோதுமை ஹெக்டெருக்கு 4,000 கிலோ விளைச்சல் தரும். கவனிக்க வேண்டியது:
பரிந்துரைக்கப்பட்ட கோதுமை ரகங்களின் சான்றளிக்கப்பட்ட விதைகளையே பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பருவத்தில் உகந்த காலத்தில் விதைப்பது முக்கியம். மண் பரிசோதனைக்குப் பிறகு சரியான அளவில் உரம் இடுதல் மிகவும் அவசியம். பரிந்துரைக்கப்பட்ட விதைப்பு முறைகளையே பின்பற்ற வேண்டும். தேவைக்கு ஏற்ப நீர்ப்பாசனம் செய்தல் அவசியம்.
தக்க தருணத்தில் களை எடுக்க வேண்டும். கரையான்கள், எலிகள், பறவைகளிடம் இருந்து பயிரை பாதுகாக்க வேண்டும். கதிர் முற்றிய பருவத்தில் அதிகம் தாமதிக்காமல் அறுவடை செய்ய வேண்டும்.