குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலை மின்சாரம் தயாரிக்கலாம்…

windmill lectricity-made-at-home-at-a-low-cost


தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

எங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்" என்கிறார் சுரேஷ்.

ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார் ராமு.

மின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.

தேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும்...!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios