சௌண்டல் (அ) வேலிமசால்

ஈரோடு – கரூர் சாலையில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்’ பயிரிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. 

இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. ஒரு ஏக்கர் தென்னை மரத்துக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படுகிறது. விதையை கொதிநீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில் அந்த விதையை தென்னை தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள் ஊடுபயிராக பயிரிடலாம்.

விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.

கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். 

ஈரோடு – கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் புதூர் அருகே கேட்புதூர் பகுதியில் வேலிமசால் செடி அதிகளவு தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக பயிரடப்பட்டுள்ளது. பார்க்க அழகாகவும், வருமானம் தரக்கூடியதாகவும் உள்ளது. செடியில் பச்சியம் சத்து அதிகளவு உள்ளதால், கால்நடைகளுக்கு மட்டுமல்ல தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். 

செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.