வீட்டுத் தோட்டத்தில் எந்த மாதிரி காய்கறிகளை வளர்க்கலாம்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…
வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம். கேரட் சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம்.
வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள் இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய பப்பாளி, செடி முருங்கை போன்ற சிறு மரங்கள், இரண்டு வருடம் கடந்தும் பயன்தரக் கூடிய முருங்கை, கருவேப்பிலை என்று வகைப் படுத்தியது பயனுள்ளதாக இருந்தது.
தக்காளி, மிளகாய், கத்தரி போன்றவை கட்டாயமாக நாற்றங்கால் முறையில் வளர்த்து, பின் அதற்கான இடத்தில் பயிரிடப் பட வேண்டும்.
முள்ளங்கி போன்ற பயிர்களை பிடுங்கி நட்டால் வளராது.
வெண்டை, முள்ளங்கி, சௌ சௌ, கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட் இவை எல்லாம் நேரடியாக விதைக்க வேண்டிய செடிகள்.
நாற்றங்கால் போட புரோட்ரே பயன்படும். பல ஏக்கரில் பயிர் செய்யும் விவசாயி கூட புரோட்ரே பயன்படுத்தினால் செலவு குறையும்.
பரந்த வயல்வெளிகளில் காய்கறிகள் பயிரிடுவதை விட வீட்டுத் தோட்டத்தில் Growbagல் பயிர் செய்வது லாபகரமானது. இதில் உர செலவு, தண்ணீர் செலவு குறைவு.
வீட்டில் தோட்டம் அமைக்கும்போது ஹைபிரிட் விதைகளை தவிர்த்து நாட்டு விதைகளை பயிரிட வேண்டும். ரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும்.
வீட்டிலேயே கம்போஸ் பிட் அமைத்தால், நம் வீட்டிலிருந்து வெளியேறும் திடக் கழிவு குறையும்.
நம் வீட்டுத் தோட்டத்தில் சோத்துக் கத்தாழை, தூதுவளை, பொடுதலை, முடக்கத்தான், கரிசாலை, தவசிக் கீரை போன்ற மருத்துவ பயனுள்ள பயிர்களை பயிரிட வேண்டும்.
பல வண்ண பூக்களுடன் இவை பார்க்க அழகாகவும் காட்சி தரும்.