கரும்பு தோகை உரம் தயாரிப்பின்போது எந்த மாதிரியான இடுபொருட்களை பயன்படுத்தணும்?
கரும்பு தோகை உரம் தயாரிப்பின்போது பயன்படுத்த வேண்டிய இடுபொருட்கள்
நுண்ணுயிர் கூட்டுக் கலவை
வேளாண்மை பல்கலைக்கழகம் பயோமினரலைசர் என்ற நுண்ணுயிரிகளின் கூட்டு கலவை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. 1 டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது.
பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இது தவிர மற்றொரு இடு பொருள் சாணக் கரைசலாகும். சாணக்கரைசலில் மட்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மட்கும் காலம் அதிகம் ஆகிறது.
கால் நடைக் கழிவுகள்
கோழி எரு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தை குறைப்பதற்கு ஆதாரமாக பயன்படுகிறது. ஒரு டன் கரும்புத் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பின்பு கரும்புத் தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.
குவியல் உருவாக்குதல்
அனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளினால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்திற்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.
கழிவுகளை கிளறிவிடுதல்
கழிவுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமில்லாமல் கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பி விடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது.
ஈரப்பதத்தை கட்டுபடுத்துதல்
மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60% ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயநிலை ஏற்படுகிறது. ஈரப்பதம், மக்குவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.