கரும்பில் ஏற்படும் பயிர் வெளுப்பை தடுத்து நல்ல மகசூல் பெறும் வழிகள்…

ways to-get-good-yields-in-sugarcane-crop-intercepted-n

கரும்பில் நுண்ணூட்டப் பற்றாக்குறையால் ஏற்படும் பயிர் வெளுப்பை (தாளை பூத்தல்) தடுக்கும் முறைகள் குறித்த வழிமுறைகளை இங்கு காணலாம்.

நிலங்களில் நுண்ணூட்டப் பற்றாக்குறை காணப்படுகிறது. துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ், தாமிரச் சத்துகளின் குறைபாடு அதிகமாக உள்ளது. இந்தச் சத்துகள் பயிர்களுக்குக் குறைவான அளவே தேவைப்பட்டாலும், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலில் பங்கு வகிக்கின்றன.

இரும்புச் சத்துக் குறைபாடு: மண்ணிலுள்ள கால்சியத்தின் அளவைப் பொருத்து இரும்புச் சத்துக் குறைபாடு தென்படுகிறது. அதாவது சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள மண்ணில் இரும்புச் சத்துப் பற்றாக்குறை அதிகம் உள்ளது.

மண்ணில் வடிகால் அமைப்புகள் இல்லாத நிலையிலும், போதிய காற்றோட்டம் இல்லாவிட்டாலும் கூட, பயிர்களுக்கு இரும்புச் சத்து தேவையான அளவு கிடைக்காது.

கரும்பில் வெளுப்பு (தாளை பூத்தல்):

கரும்பைப் பொருத்த வரை, நட்ட பயிரை விட, கட்டைப் பயிரில் இரும்புச் சத்துக் குறைபாடு அறிகுறி அதிகம் தென்படுகிறது. இலையில் நரம்புக்கு இடைப்பட்ட பகுதி பச்சையம் குறைந்து, வெளுத்துக் காணப்படும்.

தடுக்கும் முறைகள்:

வழக்கமாக தாளை பூக்கும் பகுதிகளில் ஏக்கருக்கு 20 கிலோ அன்னபேதி உப்பை (இரும்பு சல்பேட்) இடலாம். இதை தொழு உரத்துடன் சேர்த்து இடுவது நல்ல பலனைத் தரும். இதே அன்னபேதி உப்பை கரும்புத் தோகைகளின் மீது கரைசலாகவும் தெளிக்கலாம்.

இதற்கு ஏக்கருக்கு அன்னபேதி உப்பு 2.25 கிலோ, நீர்த்த சுண்ணாம்பு 2.25 கிலோ ஆகியவற்றை 450 லிட்டர் தண்ணீரில் கரைத்து, நிலத்தில் ஈரம் இருக்கும்போது கைத் தெளிப்பான் மூலம் இலைகளில் நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும்.

15 நாள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை இரும்பு சல்பேட் கரைசலைத் தெளிக்கும்போது, கரும்பில் வெளுப்புத் தோன்றுவதை கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios