பருத்தியில்  தோன்றும் சிவப்பு இலைகளை கட்டுப்படுத்த வழிகள்…

ways to-control-the-red-leaves-of-cotton


பருத்தி பொதுவாக மானாவாரியாகவும் மற்றும் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றது.

இவற்றின் சத்து மண்ணில் குறையும் பொழுது பயிரில் குறைபாடுகள் தோன்றும். மற்ற பயிர்களைக் காட்டிலும் பருத்தியில் மக்னீசியம் பற்றாக்குறை எளிதில் தோன்றும்.

இலைகள் முழுவதும் குங்கும சிவப்பு நிறமாக மாறும். இக்குறைபாடு கரிசல் மண்ணில் அதிகமாக தென்படுகின்றது.
குறைபாடு தோன்றக் காரணங்கள்:

பூக்கும் பருவத்திலிருந்து காய் பிடிக்கும் பருவம் வரை வறட்சி. பருத்தியைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக சாகுபடி செய்தல்.

பருத்திக்கு அடுத்து மக்காச்சோளம் போன்ற பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்வது. வீரிய ஒட்டு இரகத்திற்கேற்ற உரம் போடாதது.

தழைச்சத்து உரங்களை ஒரே தடவையாக இடுவது. தொழு உரம் தொடர்ந்து இடாமல் இருத்தல்.
பற்றாக்குறையின் அறிகுறிகள்:

வளர்ச்சியின் ஆரம்பத்தில் இலைகள் பசுமையாகத் தோன்றும்.

காய்கள் வெடிக்க ஆரம்பிக்கும் போது செடியில் அடி இலைகளில் இளம் மஞ்சளாக மாறும்.

 இலையின் ஓரங்களில் முதலில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இலைகள் முழுவதும் கருஞ்சிவப்பு நிறமாகத் தோன்றும்.

குங்கும சிவப்பு இலைகள் காய ஆரம்பித்து பின்பு உதிர்ந்து வாடும்.

ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி பாதிக்கும். காய் பிடிப்பது குறைந்து மகசூல் பாதிக்கும். வீரிய ஒட்டு இரகங்களில் அதிகம் தென்படும்.
நிவர்த்தி முறைகள்:

பருத்தி சாகுபடி செய்யும் போது மக்னீசியம் சல்பேட்டை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைப்பதற்கு முன்பு மண்ணில் தூவ வேண்டும்.

காய் பிடிக்கும் பருவத்தில் குறைபாடு கண்டறியப்பட்டால் மக்னீசிய சல்பேட் மற்றும் யூரியா கலந்த கரைசலை இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.

இதற்கு மக்னீசியம் சல்பேட் 50 கிராம் மற்றும் யூரியா 10 கிராம் இவற்றை 10 லிட்டர் நீரில் கரைத்து இதனுடன் 10மிலி ஒட்டுத் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் மாலை நேரங்களில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios