Asianet News TamilAsianet News Tamil

வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும் தக்காளி…

virus affects-tomato
Author
First Published Jan 9, 2017, 1:37 PM IST


மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பூஞ்சனம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் நோய் உண்டாகிறது. பொதுவாக பூஞ்சனம் மற்றும் பாக்டீரியாக்களினால் வரும் நோய்களைக் கட்டுப்படுத்தி விடலாம். வைரஸ் கிருமிகளால் உண்டாகும் நோய்களைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் இவை தங்கள் உடற்கூரை மாற்றிக் கொண்டேயிருக்கும்.

மேற்கு ஆப்பிரிக்க தேசத்தில் எபோலா என்ற வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருவதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். காரணம் இது ஒரு வைரஸ் நோய். இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. 100 பேரை இந்நோய் பாதித்தால் அதில் 70 பேருக்கு மேல் இறந்து விடுகின்றனர். பிழைத்த 30 பேர்கூட தங்கள் சொந்த உடலிலிருக்கும் எதிர்ப்பு சக்தியினால் தான் பிழைத்திருக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் இதுவரை 5000 பேருக்கு மேல் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

பயிர்களுக்கு பூஞ்சானம் பாக்டீரியாக்களினால் வரும் நோய்களைக் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் வைரஸால் வரும் நோய்களைக் கட்டுப்படுத்த எந்தப்பூச்சி மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உங்கள் தக்காளிச் செடிகளும் வைரஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன. எபோலா நோயைப் போல இதுவும் கட்டுப்படுத்த முடியாத நோய் ஆகும். உங்கள் தக்காளிச் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாகி மேல் நோக்கி சுருண்டு நிற்கிறதா? புதிய இலைகள் கூடச் சிறியதாகி சுருண்டு கொள்கிறதா? தக்காளியில் பூக்கள் தோன்றியும் காய் பிடிக்காமல் உதிர்ந்து விடுகிறதா? வைரஸ்நோய் தாக்கியிருக்கிறது என்று அர்த்தம்.

தக்காளி வைரஸ் நோய்களில் இரண்டு வகை உண்டு. 1. தேமல் நோய் 2. இலைசுருட்டை நோய். பெரும்பாலான விவசாயிகள் இந்த வைரஸ் நோய் தாக்குதலினால் தக்காளியில் நஷ்டம் அடைந்து வருகின்றனர். விஷயம் தெரியாமல் பல விலையுயர்ந்த பூஞ்சன நோய் மருந்துகளை அடித்தும் செலவு செய்ததும் தான் மிச்சம் என்றாகி விடுகிறது.

1. முதலில் இந்த நோய் காணப்பட்டவுடன் தாக்கிய செடிகளை பிடுங்கி அழித்து விட வேண்டும். ஏனென்றால் இச்செடிகள் மூலமாகத்தான் மற்ற செடிகள் பாதிக்கப்படுகின்றன.

2. இந்நோயை படத்தில் காணப்படும் வெள்ளை ஈக்கள் தான் பரப்புகின்றன. இவற்றை கட்டுப்படுத்த ஒரு டேங்கிற்கு அதாவது 10 லிட்டர் நீருக்கு 4 மில்லி கான்ஃபிடார் (இமிடாகுளோப்ரிட்) அல்லது 8 கிராம் உலாலா (ஃப்ளோனிகாமிட்) என்ற மருந்தை தெளிக்கவும்.

3. விதைகளை சேகரிக்கும்போது இந்நோய் இல்லா வயலிலிருந்து தெரிவு செய்யுங்கள். தரமான விதைகளை வாங்குங்கள்.

4. தக்காளி நாற்றுகளைப் பசுமைக் கூடாரத்தில் பாதுகாப்புடன் வளர்த்து நடவு செய்யுங்கள்.

5. கண்டிப்பாக வைரஸ் தாக்கிய செடிகளுக்கு பென்வாலரேட் (fenvalerate), சைபர்மெத்ரின் (cypermethrin) போன்ற சிந்தடிக் பைரித்ராய்ட் (synthetic pyrethroid) மருந்துகளை தெளிக்கக்கூடாது.

6. வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டச் செடிகளைக் கையால் தொட்ட பிறகு வேறு செடிகளைத் தொடக்கூடாது.

Follow Us:
Download App:
  • android
  • ios