உப்புத் தன்மையைக் கொண்ட மண்ணின் மூன்று வகைகள்...
மூன்று மண் வகைகள்:
உப்பு நிலை அதிகரிப்பதால் பாதிப்படைந்த மண்ணை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை உப்பு அதிகமுள்ள உவர் மண். சோடிய அயனிகள் அதிகமுள்ள களர் மண். இருநிலைகளையும் கொண்ட உவர் களர் மண் என மூன்று வகை உண்டு.
களர், உவர் நிலங்களில் பெரும்பாலானவை களர் மற்றும் உவர் தன்மையுடன் பருவ காலத்தில் நீர் தேங்குதல் மற்றும் கோடையில் வறண்ட சூழ்நிலை ஆகிய வளர்ச்சிக்கு உதவாத சூழ்நிலைகளையும் ஒருங்கே கொண்டுள்ள நிலை பரவலாகக் காணப்படுகிறது.
எனவே இப்பிரச்னைகள் அனைத்தையும் தாங்கி வளரக்கூடிய ஆற்றலை பொறுத்து, மர வகைகள் தேர்வு செய்வது அவசியமாகின்றது.
களர், உவர் நிலங்களை பொருத்தவரை, அவை அதிக இடர்பாடுகளை கொண்டுள்ளதால் அவற்றின் தன்மைக்கு ஏற்ப மரம் நடுதல் அவசியம்.
களர் அல்லது கார நிலம்
கார அயனியான சோடியம் மிகுந்து காணப்படும் நிலங்கள் களர் அல்லது கார நிலம் என்று அழைக்கப்படுகிறது.
இம்மண்ணில் சோடியம் கார்பனேட் (சலவை உப்பு), சோடியம் பை கார்பனேட் (சோடா உப்பு) ஆகிய உப்புகள் அதிகமாக இருக்கும்.
களித்துகள்களில் சோடியம் அயனிகள் அதிகமாக இருப்பதால் சாதாரணமாக மண்ணின் பௌதீக பண்புகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக நுண்ணிய களித்துகள்கள் மண்ணில் இருந்து விடுபட்டு கீழ்நோக்கி சென்று மண் துளைகளை அடைத்து கொள்வதால் இம்மண்ணில் காற்றோட்டமும் நீர்புகும் தன்மையும் குறைந்து நீர் தேங்கியிருக்கும்.
நிலத்தின் மேற்பரப்பில் ஈரம் குறைந்து மண் இயக்க நிலை மிகுந்து காணப்படுவதால் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் குறைவாக காணப்படும். நிலம் முழுவதையும் பண்படுத்தாமல் குறிப்பிட்ட இடங்களை மட்டும் பண்படுத்தி மரச் சாகுபடி செய்வதன் மூலம் இந்த நிலங்களை விரைவில் பயனுள்ள நிலங்களாக மாற்ற முடியும்.