மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதிலும், சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.

சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை. 

சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க, விதை பெருக்கத் திட்டம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள்,எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த திட்டம், தீவிர சிறுதானிய சாகுபடி, சிறுதானிய விரைவு திட்ட அணுகுமுறை, மானாவாரி நிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், விதை கிராம திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறு தானியங்களை பயிரிடலாம்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதிக அளவு அரிசியை மட்டுமே உட்கொள்ளுவதால் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்த நிலையில் அரிசிக்கு பதிலாக மாற்று உணவை உண்ண வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை உட்கொள்வது நல்லது. 

சிறுதானியங்களின் மகத்துவத்தை நுகர்வோர் உணர்ந்து வருவதால் சிறுதானியங்களுக்கான தேவையும் பெருகிவருகிறது. மேலும் விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிடுவதால் நல்ல லாபம் பெறலாம்.