Asianet News TamilAsianet News Tamil

கத்தரி சாகுபடியில் அதிக லாபத்தை பெற இதை செய்தாலே போதும்...

This is enough to get more profit in the cuttings.
This is enough to get more profit in the cuttings.
Author
First Published Apr 10, 2018, 1:15 PM IST


கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெற இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தினாலே போதும்.

உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். 

பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது.

விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் புறக்கணித்து, இயற்கை மற்றும் உயிர்ரக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், கத்தரி, விஷத்தன்மை சேர்வதைத் தடுக்கலாம்.

கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான், இலை பேன், மாவுப்பூச்சி, எபிலாக்னான் பொறி வண்டு ஆகியவை தாக்கும்.

தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை, கத்தரி செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.

காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கொளியால் கவரப்பட்டு, விளக்கில் சிக்கி இறக்கும். 

விளக்குப் பொறி ஒன்றின் விலை ரூ.100. மேலும், இனக் கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும். இதன் விலை ரூ.125.

முட்டை பருவத்தை அழிக்க, டிரைக்கோகிராமா கைலோனிஸ் எனும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஒரு சிசி ஒட்டுண்ணி விலை ரூ.20.

பூ பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 

கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர்ரக பூஞ்சாண மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

விசைத் தெளிப்பானாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பானாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். 

இலைப்பேன் தாக்கினால், 4 நாள்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக, செடியில் பல புதிய துளிர்களும் வரும்.

மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், வெர்டிசிலியம் லீகானி எனும் உயிர்ரக பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும். 

கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானை சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios