வெண்டையில் இருக்கு சில ரகங்களும், அவற்றில் மேற்கொள்ள வேண்டிய விதை நேர்த்திகளும்...
வெண்டைச் சாகுபடி
பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்காக நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார்படுத்துதல் அவசியம்.
வெண்டையில் பல ரகங்கள் உண்டு. அவை கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகியவையாகும்.
கோ.பி.எச். 1 இனக்கலப்பு:
இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4-இன் இனக்கலப்பு. இது மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்ற வகை. பழமானது அடர் பச்சை, இளம், குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். மகசூல் ஹெக்டேருக்கு 22.1 டன்.
கோ 1 (1976):
இது ஹைதராபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். பழமானது இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூலான 90-வது நாளில் ஹெக்டேருக்கு 12 டன். சதை அளவு 75 சதவீதம், நாரின் அளவு 14.06 சதவீதம்.
கோ 2 (1987):
இது ஏ.ஈ. 180, பூசா சவானியன் முதல் சந்ததி இனக்காப்பு. பழத்தின் பரப்பானது குறைந்த முடிகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகை, சந்தைக்கு சிறந்தது. பழமானது நீளமாக 7-8 மேடுகள் கொண்டது. மகசூல் 15-16 டன் 90 நாள்கள்.
கோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு. மகசூல் 16-18 டன் எக்டர். மஞ்சள் நிற மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
மண், தட்பவெப்பநிலை:
வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா மண் வகை நிலத்திலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
விதையும், விதைப்பும் விதையளவு:
ஹெக்டேருக்கு 7.5 கிலோநிலம் தயாரித்தல் : மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப் பாத்திகள் (பார்சால்) அமைக்க வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின் விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும்.
நிழலில் ஆற வைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும்.