இருக்கும் நீரை பயன்படுத்தி, குறைந்த செலவில் 150 நாள் பயிரான பொன்னி ரக நெல் நாற்றுகளை ‘நடவு இயந்திரம்’ மூலம் நடவு செய்து, ஏக்கருக்கு 20 சதவீதம் கூடுதல் நெல் மகசூல் கண்டு வருகிறார் சிவகங்கை,வாணியங்குடி விவசாயி கே.கண்ணா சுப்பிரமணியம்.

அவர் கூறும்போது:

30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், இயந்திரங்கள் மூலம் நாற்று போடுதல், நடவு செய்தல் மூலம் நெல் நடவு பணிகளை செய்தேன். இந்த முறை மூலம், வேலைப்பளு குறைவு, நோய் தாக்குதல் இருக்காது. தண்ணீர் தேவையும் குறையும்.
இயந்திரமின்றி வயலில் நெல் நாற்று நடவு செய்வதால் உழவு, நாற்று நடுதல், களைஎடுத்தல், நெல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் செலவாகும். கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நாற்று நடுதல், களைஎடுத்தல், அறுவடை செய்ய விவசாயி பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி வரும்.
இப்பிரச்னையை மீறி நெல் அறுவடை செய்தால், ஏக்கருக்கு 45 (மூடை 65 கிலோ) மூடை தான் கிடைக்கும். ஆனால், எனது நிலத்தில் நெல் நாற்று பதியம் போடுவது முதல், வயலில் நெல் நாற்று நடவு செய்தல், அறுவடை செய்தல் போன்று அனைத்து பணிகளும் இயந்திர உதவியுடன் நடக்கிறது.

இதனால், செலவு குறைவதோடு, திருந்திய நெல் சாகுபடி போன்று இயந்திரம் மூலம் நெல் நாற்றுகளை தள்ளி, தள்ளி நடுவதால், வேர் பிடிப்பு அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும். இதன் காரணமாக ஏக்கருக்கு வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
நெல் நாற்று விற்பனை:

நெல் நடவு செய்வதோடு மட்டுமின்றி பிற விவசாயிகளுக்கும் இயந்திர முறையில் நாற்று போட்டு, வயலில் நட்டு தரும் பணிகளையும் செய்கிறேன்.

ஏக்கருக்கு 15 கிலோ விதை நெல்லை என்னிடம் வழங்கினால், இயந்திரம் மூலம் பதியம் போட்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் நாற்று வளர செய்து, 15 நாட்களில் நெல் நாற்றுகளை பறித்து விவசாயிகள் வயலில் நடவு செய்யப்படும்.

நாற்று போடுவது முதல் வயலில் நடும் வரை அனைத்து செலவுடன் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம். இங்கு கோ51, ஏ.டீ.டி.,45 ரக நெல் அதிகம் நடப்படுகிறது.

குறைந்த நாளில் அறுவடை செய்யும் நெல்லில் மினரல் சத்து குறைவு. இதற்காக அதிக மினரல் சத்துள்ள 150 நாட்கள் வரை விளையும் பொன்னி ரக நெல்லை நடவு செய்துள்ளேன், என்றார்.