வாசம் தருவதோடு இலாபமும் தரும் “வெட்டிவேர்”…
வெட்டிவேர் பயிரிட்டால் இருமடங்கு இலாபம் பெறலாம். இது பத்து மாத பயிர்.
ஒரு நாற்று நட்டால் 100 புற்கள் கிடைக்கும். நாற்று நட்டபின் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஈரப்பதம் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புற்களை வெட்டிவிட வேண்டும்.
இதைக் கொண்டு கூரை வேயலாம். செடிகளுக்கு மூடாக்காக பயன்படுத்தலாம். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும் என்பதால் வேலியோரம் வைத்தால் ஆடு, மாடு, யானைகள் வராது.
10 மாதங்கள் கழித்து மரம் அறுக்கும் இயந்திரத்தை கொண்டு மேற்பகுதி புற்களை வெட்டி விடலாம். புல்டோசர் மூலம் வேர்ப் பகுதிகளை தோண்டி எடுக்க வேண்டும்.
இயந்திரத்தை பயன்படுத்துவதால் ஆட்கூலி செலவும் குறைவு. சிறு அளவு வேரை தண்டுடன் விட்டு வைத்தால் நாற்றாக வளரும். இதிலிருந்து 100 புற்கள் உருவாகும். களிமண் தரையில் வளர்த்தால் வேரை கழுவுவது பெரிய வேலையாகி விடும்.
மற்ற மண்ணில் நன்கு வளரும். வேர் காய்ந்த பின் உதறினால் மண் உதிர்ந்து விடும். இவற்றை இரண்டாண்டுகள் பாதுகாக்கலாம்.
ஒரு குடம் தண்ணீரில் ஐந்து வேரை இட்டு 8 மணி நேரம் ஊறவைத்தால் தண்ணீர் வாசனையாக இருக்கும்.
வெட்டிவேர் விசிறி மூச்சுக்காற்றை சுத்தமாக்கும். தலையணை தூக்கத்திற்கு உதவுகிறது. விசிறி, தலையணையை தயாரிக்கிறோம்.
களை எடுக்க வேண்டியதில்லை. நட்டு வைத்தால் போதும். கீழே ஈரம்; மேலே வெயிலுடன் நல்ல மண்ணாக இருந்தால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.3 லட்சம் கிடைக்கும்.