ஒருங்கிணைந்த பயிற்பாதுகாப்பு முறையில் கோடை உழவு செய்வது முக்கியம்…

Summer plowing is an important way to ensure coordinated protectionism ...
Summer plowing is an important way to ensure coordinated protectionism ...


கோடை மழையினைப் பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் நிலத்தினை உழவு செய்யவேண்டும்.  இதனால் கட்டிகள் உடைக்கப்பட்டு நல்ல புழுதி கிடைக்கும்.  களை இல்லா நிலையும், நீர் சேமிப்பும், நிலம் தயாரிப்பதில் நேரமும் மிச்சப்படும். நன்செய் நிலத்திற்கு கோடை உழவு கண்டிப்பாக செய்யவேண்டும். 

“சித்திரை மாத புழுதி பத்தரை மாற்றுத்தங்கம், சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்”  போன்ற வேளாண் பழமொழிகள் கோடை உழவின் சிறப்பினை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

காவிரிப் பாசனப் பகுதியில் மண் பெரும்பகுதி களியாக இருப்பதால் நெல் அறுவடைக்குப்பின் அடுத்த பருவம் வரை அதாவது 4 முதல் 5 மாதங்கள் வரை மண் வெயிலில் காய்ந்து வறண்டு வெடிப்பு ஏற்படுகிறது.  இதனால் கால்வாய் நீர் வந்தவுடன் விவசாயிகள் மண்ணை பத்தத்திற்கு கொண்டுவர பாசனம் செய்கின்றனர்.  இதனால் தேவைக்கு அதிகமாக தண்ணீர் விரையமாகிறது. 

சாகுபடிக்கு ஏற்ற வகையில் நிலத்தை தயார் செய்யும் நாட்கள் அதிகமாகிறது.  இதனை தடுக்க கோடை உழவு செய்து வெடிப்பு விடாமல் மண்ணை பொலபொலவென்று வைத்திருக்க வேண்டும்.  இதனால் மழை நீர் சேமிக்கப்பட்டு மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது. 

கால்வாயில் நீர் வந்தவுடன் விரைவில் சேறு கலக்க முடிகிறது. இதனால் 60 மி.மீ. வரை கால்வாய் நீர் மிச்சப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.  இது நெல் சாகுபடி நீர் தேவையில் இருபதில் ஒரு பங்காகும்.  இதனால் சாகுபடி நேரமும் மிச்சப்படுகிறது.

கோடை உழவு செய்து வைத்திருந்தால் மழைபெய்யும் வருடங்களில் எள் விதைத்து பலன் பெறவும், வறட்சி காலங்களில் நேரடி நெல் விதைக்கவும் இம்முறை பயன்படுகிறது.  வழக்கமாக நேரடி நெல் விதைப்பு செய்யப்படும் இடத்தில் கோடை உழவு ஒரு முக்கியமான தொழில் நுட்பமாகும்.

நெல் அறுவடைக்கு பின்னர் வயலில் ஏராளமான நெல் தாள்கள் தேங்கி விடுகின்றன.  களைச்செடிகளூம் வளர்கின்றன.  இவைகள் பூச்சிகளுக்கு உணவாகவும், உறைவிடமாகவும், முட்டைகள் இடும் பாதுகாப்பு இடமாகவும் அமைகின்றன. 

கோடை உழவு செய்வதால் களைச்செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு,  மக்கி பயிருக்கு உரமாகின்றது.  மீண்டும் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்பட்டு, அதன் விதைகளில் உற்பத்தி தடுக்கப்படுகிறது.  வயல்களில் காணப்படும் வெட்டுக்கிளிகளின் முட்டைகள் கதிர் வெட்டும் புழுவின் கூண்டுப்புழுக்கள், உரக்க நிலையில் இருக்கும் கருப்பு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சிகள், கோடை உழவின் போது நிலத்தின் அடியிலிருந்து மேலே கொண்டுவரப்படுகின்றன. 

இப்பூச்சிகள், பறவைகள் மற்றும் இதர இயற்கை விரோதி உயிரினங்களுக்கு இறையாக்கப்படுகிறது.  பொதுவாக கோடை மழை பெய்தவுடன் வயல்களையெல்லாம் விவசாயிகள் உழுவார்கள்.  அச்சமயம் வயலில் எந்தவிதமான விதைப்பும் செய்யாதபோது நிறைய பறவைகள் உழுது கொண்டிருக்கும் நிலங்களில் உட்கார்ந்துகொண்டு பூச்சிகளின் முட்டைகள், கூண்டுப்புழுக்கள் ஆகியவற்றை கொத்தி உணவாக உட்கொள்வதை வயல்வெளிகளில் கண்கூடாக காணலாம். 

மேலும் பறவைகள் உண்ணமுடியாமல் இடுக்குகளில் இருக்கும் முட்டைகள் கூண்டுப்புழுக்கள் சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகின்றன.  அறுவடை செய்த தாள்களில் இருக்கும் குருத்துப்பூச்சிகளின் கூண்டுப்புழுக்கள் கோடை உழவினால்  அழிக்கப்படுகின்றன.

இது தவிர வயல்களில் காணப்படும் களைகள் பல்வேறு பூச்சிகளுக்கு உறைவிடமாக இருக்கின்றன.  குறிப்பாக புல் வகையைச்சார்ந்த அனைத்து களைகளும் நெற்பயிரை தாக்கக்கூடிய முக்கிய பூச்சிகளுக்கு உறைவிடமளிக்கின்றன.   கோடை உழவின் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுவதால் இதனை சார்ந்து வாழும் பூச்சிகள், அதிகம் பெருகாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

நெல்லில் இலையுறை கருகல், துங்ரோ நோய், மஞ்சள் குட்டை நோய் போன்ற நோய்கள் பரவுவதற்கு காரணியாக உள்ள பூஞ்சானங்கள் மற்றும் நுன்னுயிர் கிருமிகள் நெல் தாள்களிலும், களைச்செடிகளிலும் புகலிடமாக இருந்துவருகின்றன.  கோடை உழவு செய்வதால் நோய் கிருமிகள், பூஞ்சானங்கள் களைகளோடும் தாள்களோடும் சேர்ந்து அழிக்கப்படுகின்றன. 

எனவே ஒருங்கிணைந்த பயிற்பாதுகாப்பு நிர்வாக முறையில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கின்றது.  ஆழ்குழாய் கிணற்றுப்பாசனத்தின் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் கோடை உழவு செய்தவுடன் சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர பயிர்களை விதைத்து 45 நாட்களில் மடக்கி உழவு செய்தால் குறுவை பயிறுக்கு ஒரு வளமான இயற்கை பசுந்தழை உரம் கிடைக்கும். 

பசுந்தாள் பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் உள்ள பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிர்கள் மூலம் நிலைப்படுத்தி நிலத்தை வளமுடையதாகச் செய்கின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios