நெற்பயிரைத் தாக்கும் முக்கியமான சில பூச்சிகளும் அவற்றிற்கான தீர்வுகளும்...
நெற்பயிரைத் தாக்கும் முக்கியமான பூச்சிகள் புகையான் மற்றும் குருத்துப் பூச்சி.
புகையான் :
நெல் வயலில் அதிகமாக நீர்தேங்கி வெளியேற முடியாமல் உள்ள இடங்களில் இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நெல்லின் தண்டு பகுதியில் கூட்டமாக அமர்ந்து சாறு உறிஞ்சும் இந்தப் பூச்சிகளால் நெற்பயிர் முற்றிலுமாக காய்ந்து விடும்.
தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் எரித்தது போன்ற அறிகுறிகள் ஆங்காங்கே தென்படும். தழைச்சத்து உரங்களை 3-4 முறை பிரித்து இட வேண்டும். செயற்கை பைரித்திராய்டு, பூச்சிகளின் மறு உற்பத்தியை தூண்டும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. 3 சத வேப்ப எண்ணெய் கரைசலை ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் சோப்பு கரைசலுடன் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சிக் கொல்லிகளான டைக்குளோர்வாஸ் 76 எஸ்.சி. 200 மில்லி (அல்லது) புப்ரோபசின் 25 எஸ்.சி. 325 மில்லி, (அல்லது) பிப்ரோனில் 5 சத எஸ்.சி. 400 மில்லி (அ) இமிடாகுளோபிரிட் 17.8 சதம் 40 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
குருத்துப் பூச்சி:
இந்தப் புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு அதன் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு உட்பகுதியை கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். அவ்வாறு வாடிய நடுக்குருத்தை லேசாக இழுத்தால் கையோடு வந்து விடும்.
கதிர் பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் தொடர்ந்தால் வெளிவரும் கதிரில் மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறுகின்றன. அதனால் மகசூல் பெருமளவு பாதிக்கப்படும். முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 5 சிசி என்ற அளவில் வார இடைவெளியில் மூன்று முறை கட்ட வேண்டும்.
தாவரப் பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சத கரைசலை ஒரு ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாக காணப்படும்போது ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ப் 50 சத பவுடர் 400 கிராம் (அல்லது) குளோர்பைரிபால் 20 இ.சி. 500 மில்லி (அல்லது) பிப்ரோனில் 5 சதம் 400 மில்லி என்ற அளவில் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.