சம்பா பயிர்கள் கால்நடைகளுக்குத் தீவனமாகும் அவலம்…
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதிகளில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாததால் சம்பா பயிர்கள் கால்நடைகளுக்குத் தீவனமாகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்துள்ளவை விண்ணமங்கலம், பூதராயநல்லூர், பிரமன்பேட்டை பகுதிகள்.
இப்பகுதிகள் காவிரியின் கிளை ஆறான வெண்ணாற்றின் வடபகுதியில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு போகச் சாகுபடியே நடைபெறுகிறது.
நடப்பாண்டில் இந்தப் பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கரில் சம்பா பயிர்கள் தெளிப்பு முறையில் விவசாயம் செய்யப்பட்டது. இவற்றில் பல நூறு ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகிய நிலையில் உள்ளன. இனி தண்ணீர் வந்தாலும் பயனில்லை என்ற நிலையில், சில விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களில் தங்களது கால்நடைகளை மேய விட்டுள்ளனர்.
“ஆண்டுதோரும் சம்பாவில் ஏக்கருக்கு சுமார் 40 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டும் வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி தெளிப்பு முறையில் விவசாயம் செய்தோம். ஆரம்பத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன.
கடந்த மாதம் முதல் தண்ணீர் வரத்துக் குறைவால் இப்பகுதிகளின் சிறு வாய்க்கால்களில் முற்றிலுமாகத் தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்கள் கருக ஆரம்பித்தன. கர்நாடகமும் கைவிரித்த நிலையில், செழிப்பற்ற பயிர்களில் கால்நடைகளை மேய விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு இதுவரை சுமார் ரூ. 5000 வரை செலவு செய்தோம். நிகழாண்டு இப்பகுதியில் நெல் உற்பத்தி இருக்காது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, ஏக்கருக்கு ரூ. 20,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் ராமலிங்கம்.