வெள்ளாடுகளுக்கு தீவனமாக பயன்படும் துவரை மற்றும் கலப்பு தீவனம் பற்றி தெரிஞ்சுக்க இதை வாசிங்க...
துவரை இலை
தற்போது துவரம்பருப்புடன் சத்துமிகு தழை வழங்கும் மாத்துவரை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் புன்செயில், துவரை பல பகுதிகளில் பயிரிடப்படுகின்றன.
பயிர் விளைந்து துவரையை வெட்டித் துவரைப் பருப்பைப் பிரிக்கும்போது, உதிரும் இலை, நெற்றுக் கூடுகளை ஆடுகளுக்குத் தீவனமாக சேர்த்து வைக்கலாம். இந்த தவிரப் பருத்திச் சாகுபடிப் பகுதிகளில் பருத்தி இலைகளையும், சேகரித்துத் தீவனமாக அளிக்கலாம்.
இது போன்றே மொச்சை, அவரைச் செடிகளில் உதிர்ந்த இகைளை வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
உலர் தீவன அவசியம் என்ன? பொதுவாக அசைபோடும் கால்நடைகள், சிறப்பாக வெள்ளாடுகள் பசுந்தீவனத்தை மட்டும் உண்டு அவற்றின் முழுத் தீவனத் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது போகலாம். முக்கியமாக அவற்றிற்குத் தேவைப்படும் அளவு காய்வு நிலைத் தீவனத் தேவை (Dry Matter) அடைய முடியாது போகும்.
ஆகவே, அவற்றின் பசி அடங்காது. வயிறு நிறையத் தீவனத்தைத் தின்றுவிட்டு, அதற்கு மேல் தின்ன முடியாது இருக்கும் வெள்ளாடுகள் இரவில் பசியால் துன்புறும். காரணம், பசுந்தீவனம் பெரு வயிற்றின் இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆகவே மாடுகளுக்கு இரவில் சிறிதளவு காய்ந்த தீவனம் அரைக்கிலோ கொடுக்கலாம் அல்லது பகல் வேளையில் பாதியும் இரவில் பாதியுமாகக் கொடுக்கலாம்.
கலப்புத் தீவனம்
வெள்ளாடுகளுக்கு மாடுகளைப் போன்று அதிக அளவில் கலப்புத் தீவனம் பண்ணையாளர்களுக்கு அதிகச் செலவை உண்டு பண்ணும். பெரும் பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கப்படுவதில்லை.
ஆடு வளர்ப்பவர்கள் சிலர் வீட்டில் மீதியாகும் சிறிதளவு சோறு, தவிடு ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இச்சூழ்நிலையில் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பலர் வீட்டில் விருந்தின்போது மீதியாகும் சோறு, பலகாரங்கள் ஆடு மாடுகளுக்குக் கொடுத்து விடுவார்கள். இதனால் பல வெள்ளாடுகள் இறந்துள்ளன.
வெள்ளாடுகள் நம்மைப் போன்று சோறு சாப்பிடும் இனம் அல்ல. வெள்ளாடுகளின் பெருவயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்து அதன் காரணமாக இறக்க நேரிடும்.
சாதாரணமாக 100 – 150 கிராம் சோறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரு வயிற்றுலுள்ள புரோட்டோசோவா என்னும் ஒற்றைச்செல் உயிரினங்கள் இவற்றை விழுங்கிப் பெருமளவில் அமிலம் வெளியாவதைத் தடுத்து நன்மை செய்துவிடும்.
பொதுவாக, ஆழ்கூள முறையில், அதிக எண்ணிக்கையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கலப்புத் தீவனங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். தவிடு, பிண்ணாக்கு, நவதானியம் ஆகிய மூன்றும் கீழ்க்காணும் விதத்தில் கலந்து தீவனம் தயாரிக்கலாம். இதில் 1% உப்பு, 2% தாது உப்புக் கலவை சேர்க்கப்பட வேண்டும். ஆகவே
தானியம் 50%, பிண்ணாக்கு 20%, தவிடு 17%, தாதுஉப்பு 2%, உப்பு 1% என்னும் வீதத்தில் வெள்ளாடுகளுக்குக் கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். கலப்புத் தீவனத்தில் 12 – 15% செரிக்கும் புரதமும், 60 – 70 மொத்தச் செரிக்கும் சத்துக் கூறும் இருக்க வேண்டும்.