குமிழ் மரம்:

குமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் மெலைனா அர்போரியா ஆகும். இது வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ்மேலைன என்பவரை நினைவூட்டும் வகையில் மெலைனா என்ற முதற்பெயரை கொண்டது. அர்போரியா என்பது மரத்தைப் போன்றது எனப் பொருளாகும். 

குமிழ்மரத்தின் தாயகம் பாரசீகமாகும்.இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, பர்மா, பங்களாதேசம், தென்சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

நம் நாட்டில் இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. 

ஈரச் செழிப்பான பகுதிகளில் வேகமாக நன்கு வளர்கிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையாக வளர்கிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் தனியார் நிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

மருத்துவ பயன்கள் :

குமிழ் மர இலைச்சாறு சிறுநீரக கோளாறு, வெள்ளைப்படுதல், வெட்டை மற்றும் இருமலுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. 

தலைவலியை நீக்க குமிழ் இலையை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போடலாம். 

குமிழ் மரப்பூக்கள் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன.

குமிழ் மரவேர்கள் பசியை தூண்டவும், பெண்களுக்கு பால்பெருக்கியாகவும், மலமளிக்கியாகவும், புத்தி பேதலித்தல் மற்றும் வலிப்பு நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் காய்ச்சல், அஜீரண கோளாறு, வெள்ளைப்படுதல் ஆகியவற்றிற்கு வேரின் கஷாயம் மருந்தாக பயன்படுகிறது.

இந்த மருத்துவ காரணங்களால் தான் குமிழ் மரம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.