Asianet News TamilAsianet News Tamil

பரோட்டாவுக்கு வில்லன் மனிதருக்கு ஹீரோ “திணை”…

parotta thinai
Author
First Published Oct 6, 2016, 9:03 AM IST


“ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா?

உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?”

இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக எழுதியிருக்காரு கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்.

ஆக, உணவுப் பஞ்சம் மூலமாதான், ஊர் முழுக்க பரோட்டா பரவியிருக்கு. அட, ஆமாங்க… இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்துல, உலகம் முழுக்கவே உணவுப் பஞ்சம். போர் வீரர்களுக்குகூட உணவு கொடுக்க முடியாத நிலை. அப்பதான், குறைஞ்ச செலவுல, வயித்தை நிரப்புற உணவு பத்தின ஆராய்ச்சி நடந்திருக்கு. அதுல முதலிடத்துக்கு வந்தது மைதா.

மைதா மாவுல செய்யுற பரோட்டாவைச் சாப்பிட்டா, ரொம்ப நேரம் பசி எடுக்காது. கொஞ்சமா சாப்பிட்டாக்கூட போதும்னு ‘பரோட்டா புகழ்’ பாடி, அதை மேடை ஏத்தியிருக்காங்க சிலர். ஆனா, சில நாட்களிலேயே, ‘பரோட்டாவை நாங்க சாப்பிட மாட்டோம். இதனால, எங்க வயிறு கெட்டு, உடல்நலம் பாதிக்குது’னு பரோட்டா பேர்ல முதல் புகார் கொடுத்தது இரண்டாம் உலகப் போர்வீரர்கள்தான். ஆக, 1940-ம் வருசம் தொடங்கி, பரோட்டாவுக்கு, எதிர்ப்பு இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனாலும், அதை நம்ம ஆட்கள் இன்னிவரைக்கும் விடறதா இல்லை. விலாசி தள்ளுறாங்க…

பரோட்டா சரியில்லைனு சொல்றதைவிட, அதுக்கான மூலப்பொருளான மைதா மாவுலதான் கோளாறு இருக்குனு சொல்லணும். என்ன கோளாறுங்கிறீங்களா? வடநாட்டுப் பக்கம் சுத்தின நேரத்துல, கோதுமை மாவு தயாரிக்கிற ஆலைகளில் முதல்ல, கோதுமையில இருக்கிற கல், மண்ணை எல்லாம், மெஷின் மூலமா சுத்தம் செய்யுறாங்க. தவிடு நீங்கியவுடனே, கோதுமை மேல தண்ணீர் தெளிச்சி வைக்கிறாங்க. சுமார் 24 மணி நேரம் கழிச்சு, பார்க்கும்போது, கோதுமை உருண்டு, திரண்டு இருக்கு. இதை நல்லா காய வைக்கிறாங்க.

அடுத்ததுதான் முக்கியமான வேலை ஆரம்பிக்குது. இந்த கோதுமையை ஒரு மெஷின்ல கொட்டுறாங்க. அது, மேல் தோலை மட்டும், அளவா சுரண்டி எடுக்குது. இதை ‘ரவை’னு சொல்றாங்க. அப்புறம், இன்னொரு மெஷினுக்குப் போகுது, அங்க இன்னும் கொஞ்சம் தோலை உரிக்கிறாங்க. இதுக்கு ‘மைதா’னு பேரு. அடுத்த மெஷினுக்கு போயிட்டு வரும்போது, அதை ‘ஆட்டா’னு சொல்றாங்க. சரி இந்த மூணு மாவுலயும், எது நல்லதுனு கேட்டா? மைதா மாவுதான் நல்லதுனு சொல்றாங்க. ஏன்னா, ‘க்ளூடன்’ங்கிற சத்துப் பகுதி மைதாவுலதான் இருக்காம். இப்படி சத்துள்ள மைதா மாவு, சுமாரான நிறத்துல இருக்கு. அதனால, இரசாயனத்தைக் கொட்டி, அதை ’வெள்ளை’ நிறத்துக்கு மாத்தறாங்க. இதனாலதான் மைதாவுக்கு கெட்டப்பேரு. இதைச் சாப்பிடறதால… கண்ட கண்ட பிரச்சனைகளும் வந்து சேருது.

சுமாரான நிறத்துல இருக்கிற மைதாங்கிறது கோதுமை மூலமா கிடைக்கிற நல்ல சத்து நிறைஞ்ச ஒரு உணவுப் பொருள் எனபதில் சந்தேகமே இல்ல. அதேசமயம், நம்ம ஊர்லயும், கோதுமைக்கு இணையான தானியம் உண்டு.

இதையும் கூட, போர் வீரர்களுக்கு வைச்சு படைக்கிறாங்க. ஆமாங்க, திருச்செந்தூர்ல ‘சூரசம்ஹாரம்’ முடிஞ்சவுடனே முருகனுக்கு ‘தினை மாவை வெச்சுத்தான் சாமி கும்பிடுவாங்க. போர் செய்த களைப்பைப் போக்கக் கூடிய சக்தி, தினை அரிசிக்கு உண்டு.

’உடலை வலுவாக்குவதுடன், சிறுநீரைப் பெருக்கும் தன்மைகளும் உண்டு. இது மிக சூடான தானியம். வாயுத் தொல்லையையும், கபத்தையும் போக்கும் பசியை உண்டாக்கும். தினையில் உள்ள புரதச்சத்து, கோதுமைக்கு இணையானது. அரிசி, கோதுமையைவிட இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகமாக இருக்கு’னு தினையைப் புகழ்ந்து சொல்றாங்க.

தினையோட தவிட்டைக் கூட வீணாக்கிறது இல்லை. பிஸ்கெட் கம்பெனிகாரங்க தினைத் தவிட்டை வாங்கி சுவையான பிஸ்கெட் செய்றாங்க. பிஸ்கெட் சுவைக்கு தினை தவிடுதான் மூலகாரணம்ங்கிற உண்மையை யாரும் சொல்வதில்லை.

யானை விலை, குதிரை விலை விக்கிற சத்து மாவுல தினை மாவைத்தான் முக்கியமா கலந்து விக்கிறாங்க.

‘லவ் பேர்ட்ஸ்’னு சொல்லப்படுற காதல் பறவைகள் தினையை விரும்பிச் சாப்பிடும். கடுமையான வறட்சியில கூட, தாக்குப்பிடிச்சு வளரும் தன்மை உள்ள, இந்த தானியத்தை மலைப்பகுதியிலதான் ஆரம்ப காலத்துல விவசாயம் செய்திருக்காங்க.

இதனாலதான் மலைப்பகுதியில் உள்ள மக்களின் முக்கியமான உணவா ‘தேனும் தினை மாவும்’ இடம் பிடிச்சிருக்கு. தினை மாவுல அதிரசமும், முறுக்கும் செஞ்சு சாப்பிட்டா, வாழ்நாள் முழுக்க அந்தச் சுவையை மறக்க முடியாது

Follow Us:
Download App:
  • android
  • ios