நாற்றங்கால் பராமரிப்பு முறைகளைக் கையாண்டு அதிக மகசூல் அடையலாம்…
பிசான நெல் சாகுபடிக்கு தரமான நெல் நாற்றுக்களை உற்பத்தி செய்வது பற்றி இங்கு காண்போம்.
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வது மிகவும் அவசியம்.
ரகங்களைத் தேர்வு செய்தல்:
பிசான பருவத்துக்கு ஏற்ற குறுகிய கால 110 முதல் 115 நாள்கள் வயதுடைய அம்பை-16, ஆடுதுறை-36, ஆடுதுறை-45 ரகங்களையும், மத்தியகால, 120-125 நாள்கள் வயதுடைய ஆடுதுறை- 39 ரகங்களைத் தேர்வு செய்து சான்று பெற்ற விதைகளை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளைப் பெறுவதற்கு 20 கிலோ சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவது அவசியம்.
திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 3 கிலோ சான்று விதை போதுமானது.
விதை நேர்த்தி:
விதை மூலம் பரவும் இலைப் புள்ளிநோய், குலைநோய், தூர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது கார்பண்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மேலும், வளிமண்டலத்திலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும் அசோஸ்பைரில்லம் 2 பொட்டலம் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சிக்கு தேவையான மணிச்சத்தை பயிருக்குக் கரைத்து கொடுக்கவல்ல பாஸ்போபாக்டீரியா 2 பொட்டலம் உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்குத் தேவையான 20கிலோ விதையுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
உயிர் உரங்கள் விதையுடன் ஒட்டும் பொருட்டு ஆறிய வடிகஞ்சியை பயன்படுத்த வேண்டும்.
நாற்றங்கால் தேர்வு:
ஒரு ஏக்கருக்கு நடவு செய்வதற்கு 8 சென்ட் நாற்றங்கால் போதுமானது. திருந்திய நெல் சாகுபடியில் நடவுசெய்ய ஏக்கருக்கு 1 சென்ட் மேட்டுபாத்தி பாய் நாற்றங்கால் போதுமானது.
உர நிர்வாகம்:
8 சென்ட் நாற்றங்காலுக்கு 1000 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். கடைசி உழவுக்குமுன் 8 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டி.ஏ.பி. இட வேண்டும். அல்லது 16 கிலோ யூரியாவை 120 கிலோ சூப்பர் பாஸ்பேட் உடன் கலந்து அடியுரமாக இடலாம்.
களிமண் பாங்கான நிலங்களில் நாற்றுகளை பிடுங்குவதற்கு 10 நாள்களுக்குமுன்னர் ஒரு சென்ட் டுக்கு 4 கிலோ ஜிப்சம் இட வேண்டும். ஜிப்சம் இடுவதால் நாற்றுக்களின் வேர்களை அறுபடாமல் எளிதில் எடுத்துவிடலாம்.
களை நிர்வாகம்:
நாற்றங்காலில் வரும் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த 3 நாள்களுக்குப் பின்னர், 20 சென்ட் நாற்றங்காலுக்கு பூட்டாகுளோர் 80 கிராம் மருந்தை 2 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.
பூச்சி நோய் நிர்வாகம்:
நாற்றங்காலில் வரும் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த இமிடாகுளோர்பிரிட் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 மிலி கலந்து தெளிக்கலாம். பூஞ்சான் நோய்களைக் கட்டுப்படுத்த காபென்டாசிம் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
இந்த முறைகளைப் பின்பற்றி வளர்ந்த நாற்றுகளை 20-22 நாள்களில் பறித்து நடவு செய்ய வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையில் 14-15 நாள்கள் வயதுடைய நாற்றுகளை, குத்துக்கு 1-2 நாற்றுகளை 25 செ.மீ.க்கு 25 செ.மீ. என்ற இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும்.
இவ்வாறு நாற்றங்கால் பராமரிப்பு முறைகளைக் கையாண்டு தரமான, வளமான நாற்றுகளைப் பெற்று அதிக மகசூல் அடையலாம்.