கீரை உடம்புக்கு மட்டுமல்ல விவசாயத்திற்கும் சிறந்தது; ஆண்டுமுழுவதும் வருமானம் தரும்…
ஏதாவது நோய் என்று மருத்துவமனைக்குச் சென்றால், அங்குள்ள மருத்துவர் சொல்லும் முதல் ஆலோசனை ‘உணவில் கீரை சேருங்கள்’ என்பதாகத்தான் இருக்கும்.
அதிக மருத்துவக்குணம் கொண்ட கீரை, மனித உடல் நலத்துக்கு மட்டுமல்ல அதை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கும் நன்மை கொடுக்கும் பயிர் என்றால், அது மிகையில்லை.
ஆண்டு முழுவதும் வருமானம் கொடுக்கும் குறுகியகால பணப்பயிரான கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும்.
குறிப்பாக ஆண்டு முழுவதும் மிதமான சீதோஷ்ண நிலை இருக்கும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் கீரை சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள்.
கரும்பு நட்டவங்க, வருமானத்தைக் கண்ணுல பார்க்க ஒரு வருஷம் காத்திருக்கணும். அதுக்கு மேல கட்டுபடியாகிற விலையும் பல சமயம் கிடைக்கிறதே இல்லை. அதனால நடுத்தர விவசாயிங்க கரும்பு சாகுபடி பரப்பளவைக் குறைச்சிட்டு குறுகிய நாள்ல வருமானம் கொடுக்கிற வெங்காயம், தக்காளி, பீட்ரூட், கீரைனு காய்கறி பக்கம் போயிட்டாங்க.
அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மூணையும் ஒண்ணரை ஏக்கர்ல மாத்தி மாத்தி பயிர் செய்றாங்க.
வெயில், மழையைச் சமாளிக்கும் முறைகள்!
அதிகமழை, அதிக வெயில் இருக்கும் நாட்களில் கீரை, கொத்தமல்லி போன்றவைகளுக்கு அதிக கிராக்கி இருக்கும். வெயில் காலங்களில் நிழல் வலபந்தல் அமைத்து, கீரைகளை வளர்க்கலாம்.
அதிக உயரம் வளராத சிறுகீரை, அரைக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றை,தோட்டத்தில் தென்னை மரங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த நிழலில் வளர்க்கலாம்.
அதேபோல பாத்திகளின் மீது வெயில்படாமல் தென்னங்கீற்றுகளை வைத்து மூடி வைக்கலாம். இந்த கீற்றுகளை மாலைநேரத்தில் அப்புறப்படுத்தி விடவேண்டியது அவசியம்.
என்னதான் வெயில் சூட்டை தணித்து கீரை வளர்த்தாலும், வழக்கமான நாட்களில் கிடைக்கும் மகசூலை விட, குறைவான மகசூலே கிடைக்கும். ஆனாலும், மகசூல் இழப்பை சரிசெய்யும் அளவுக்கு அதிக விலை கிடைக்கும்.
அதே சமயம் அடைமழைக் காலங்களில் கீரை வளர்க்க வடிகால் வசதி கொண்ட அடர்த்தியான நிழல் வலைப்பந்தல் அமைக்கலாம் அல்லது பெரிய அளவில் செய்ய விரும்பினால், பசுமைக்குடில், அமைப்பது உகந்தது.
சாகுபடி செய்யும் முறைகள்:
ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கீரைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்யும் விதம் குறித்து இங்கே பார்க்கலாம்.
10 சென்ட் நிலம்…. பராமரிப்பு முறை!
கீரை சாகுபடி செய்யும் நிலத்தில் மண்கட்டிகள் இல்லாமல் பொலபொலத் தன்மையுடன் இருக்குமாறு மூன்று உழவு செய்ய வேண்டும். அதில், தகுந்த இடைவெளியில் 30 சென்ட் நிலத்தை 10 சென்ட் அளவில் மூன்றாக பிரித்து கொள்ள வேண்டும்.
அடியுரமாக டி.ஏ.பி. 10 கிலோவும், மேலுரமா யூரியா 15 கிலோவும் இட வேண்டும். (இயற்கை முறை என்றால், தலா 500 கிலோ தொழுவுரத்தை அடியுரமாகக் கொட்டி இறைத்து சமன்படுத்த வேண்டும்) பிறகு, 7 அடி நீளம், மூன்றரை அடி அகலம் உடைய பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திகளின் மேல் 2 கிலோ கீரை விதையை தூவி விட்டு, அதை மண் மூடும்படி குச்சியால் கீறிவிட வேண்டும். விதைத்த கீரை விதைகளை எறும்புகள் பொறுக்கி சென்று விடும். அதைக் கட்டுப்படுத்த கீரை விதைத்த உடனே பாத்திகளில் மிதமான தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும்.
வாய்க்கால் நிறைய தண்ணீர் பாசனம் செய்யும்பாது விதைகளை அடித்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
அரைக்கீரை மற்றும் சிறுகீரை இரண்டுக்கும் ஒரே விதமான சாகுபடி முறைகள்தான். இரண்டு கீரைகளுக்கும் தலா 2 கிலோ விதை போதுமானது. விதைத்த 3-ம் நாளில் விதைகள் முளைவிடும். தொடர்ந்து ஈரம் காய்ந்து போகாதபடி பாசனம் செய்ய வேண்டும்.
10-ம் நாளில் புல், பூண்டுகள் போன்ற களைச்செடிகள் பாத்திகளில் தென்படும். அந்த சமயத்தில் ஒரு களை எடுப்பது நல்லது. களை எடுத்த கையோடு 15 கிலோ யூரியாவை (இயற்கை முறை என்றால் 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசன நீரில் கலந்து விடலாம்) பாத்திகளில் தூவி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.
குறுகிய காலப் பயிரான கீரைச் செடிகளில் நோய்த்தாக்குதல் அதிகம் இருக்காது. தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்தால் 22 ம் நாள் பாத்திகளில் வளர்ந்து நிற்கும் கீரைகளை அறுவடை செய்யலாம்.
ஒரு கிலோ விதைக்கு ஆயிரம் கட்டுகள் என்பது கீரையின் மகசூல் கணக்கு. 10 சென்ட் நிலத்தில் 2 ஆயிரம் கட்டுகள் வரை கிடைக்கும்.
பாலக் கீரையைப் பொறுத்தவரை, 10 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்ட 7 அடி நீளம் மூன்றரை அடி அகலம் கொண்ட பாத்திகளில் 2 செண்டிமீட்டர் இடைவெளியில் தலா ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். இதற்கு 350 கிராம் விதை போதுமானது.
மற்றக்கீரைகளுக்குச் செய்வது போலவே 10 நாளில் களை எடுத்து மேலுரமாக 15 கிலோ யூரியா (100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசனநீரில் கலந்து விடலாம்) கொடுக்கவேண்டும். 40 நாளில் அறுக்கத் தொடங்கலாம். குறைந்தபட்சம் 2,000 கட்டுகள் வரை கிடைக்கும்.
முழுவதும் அறுத்து முடிந்ததும் மறுபடியும் ஒரு களை எடுத்து மேலுரம் கொடுத்து, பாசனம் செய்தால் தொடர்ந்து 6 முறை அறுவடை செய்யலாம். 10 சென்ட் நிலத்தில் 8 ஆயிரம் கட்டுகள் வரை கிடைக்கும்.