நெல்லிக்காய் சாகுபடியில் ஏக்கருக்கு 1 லட்சம்; பட்டையைக் கிளப்பும் பழனி…
நெல்லிக்காயில் வைட்டமின் “சி’ மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால் நெல்லிக்காய்க்கு சந்தையில் நல்ல மவுசு உள்ளது.
நெல், கரும்பு, மா, தென்னை, கொய்யா, வாழை பயிரிடும் விவசாயிகள், மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே நெல்லியில் வருமானம் கிடைக்கும், அதிக தண்ணீர் தேவை என்று கூறி அதன் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் 15 ஆண்டுகளாக 13 ஏக்கரில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நெல்லிக்காய் மரங்களை வளர்த்து, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டி, நெல்லியின் அருமையை பறைசாற்றி இருக்கிறார் பழனி.
“வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் நெல்லிசாகுபடி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். நெல்லியில் என்.ஏ.,7, காஞ்சன், சாக்கையன், கிருஷ்ணா ஆகிய 4 ரக மரக்கன்றுகள் உள்ளன.
தோட்டக்கலைத்துறையில் இலவசமாக 1200 மரக்கன்றுகள், பட்டிவீரன்பட்டியில் ஒரு கன்று ரூ.35 வீதம் 1300 மரக்கன்றுகள் என மொத்தம் 7 ஏக்கரில் நெல்லி நட்டுள்ளேன்.
15 அடி இடைவெளி விட்டு குழிதோண்டி, வேப்பம் புண்ணாக்கு, குப்பை, சூப்பர் பாஸ்பேட் உரமிட்டு 2,500 மரக்கன்றுகளை பராமரிக்கிறேன்.
ஒரு ஏக்கரில் கன்று நட்டுவளர்த்து, சொட்டு நீர்ப்பாசனம், நிலத்தை தயார்செய்தல், குழிதோண்டுவது, உரமிடுவது என ரூ.40 ஆயிரம் செலவாகும். ஒரு ஏக்கரில் 200 கன்றுகள் நடலாம்.
மூன்று ஆண்டுகளில் நன்றாக வளர்ந்து கைமேல் பலன் கிடைக்கும். ஒரு மரத்திற்கு 20 முதல் 30 கிலோ வரை காய் கிடைக்கும். சீசன் நேரத்தில் ஒருகிலோ ரூ.15 முதல் ரூ.20, மற்றபடி கிலோ ரூ.30 வரை விலை கிடைக்கும்.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி நெல்லி மரங்களில் பூவெடுக்கும் காலம். அப்போது மரம் வாடாமல் பார்த்து கொண்டால் போதும். தோட்டகலைத் துறையில் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் தேன்பெட்டிகளை வாங்கி மரங்களுக்கு இடையில் வைத்தால் அயல்மகரந்த சேர்க்கையால் 30 சதவீதம் காய்ப்பு அதிகரிக்கும். நமக்கு தேனும் கிடைக்கும். நான் ஒரு ஏக்கரில் 3 தேன்பெட்டிகள் வைத்துள்ளேன்.
ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ப்பு அதிகமாக இருக்கும். 12 வயதுள்ள மரத்தில் 60 முதல் 100 கிலோகூட நெல்லி காய் கிடைக்கும். சென்ற ஆண்டு 750 மரங்களில் அதிகபட்சமாக 700டன் வரை காய்கள் கிடைத்தது. சென்னை கோயம்பேடு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
சொட்டு நீர்ப்பாசன வசதியுடன், இயற்கை உரமிட்டால் நல்ல வருவாய் கிடைக்கும்,