இயற்கை முறையில் கற்பூரவல்லி சாகுபடி செய்யலாம்; எப்படின்னு இதை வாசிங்க தெரியும்...
கற்பூரவல்லி வாழை சாகுபடி
கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம்.
ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும்.
குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம்.
வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது.
20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும்.
இதேபோல நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
நூறு லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும்.
இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இரண்டாம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம்.