நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை ஒழிக்க இயற்கை மருந்து இருக்கு…
தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் ஓரளவு வளர்ந்துள்ளது. வானம் மப்பும் மந்தாரமாக இருப்பதால் நெற்பயிர்களில் பழுப்பு நிறம், குறுத்துப்புழு, பச்சை வெட்டுகள் போன்ற நோய்கள் தாக்குதல் காண வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேற்கண்ட பூச்சி நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விஷத்தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்துவதால், நாம் உண்ணும் உணவும் விஷமாகிறது. இதனால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு நம்மிடம் இயற்கையிலேயே கிடைக்கும் வேம்பு, நொச்சி மற்றும் எருக்கு செடிகளை கொண்டு இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தினை விவசாயிகளே தயாரித்து, பயன்படுத்தி நெற்பயிரில் தோன்றும் பூச்சி நோய்களை அதிக செலவில்லாமலும் கட்டுப்படுத்தலாம்.
வேப்பிலை சாறு கரைசல்: ஒரு கிலோ வேப்பிலையை அரைத்து 20 லிட்டர் தண்ணீர் கலந்து வடிகட்டி இந்த சாறுடன் இரண்டு மடங்கு நீர்கலந்து தெளிப்பதால் பயிரை தாக்கும் புழுக்கள் கட்டுப்படுத்துவதுடன் வேப்பந்தழை போட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. மேலும், வேப்பிலைத்தழையில் மணி, சாம்பல் சத்துக்கள் இருப்பதால் பயிர்களுக்கு சத்து அதிகம் கிடைக்கிறது.
வேப்பங்கொட்டை கரைசல்: 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200லிட்டர் நீர் சேர்த்து இதனுடன் 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும்.
வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பான் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளி புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், நெல்புகையான், இலை சுருட்டுப்புழு, ஆனைக்கெதம்பன், கதிர்நாவாய்பூச்சி ஆகியவற்றை கட்டுப்ப்டடுத்தலாம்.
நொச்சி இலை, வேம்பு தழை கரைசல்:
நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனை கூழாக்கி ஒரு இரவு வைத்திருந்து பின்பு வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளித்தால் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு, குருத்துப்புழு, கதிர்நாவாய்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.
எருக்கம் தழை:
எருக்கம் தழையினை 20 கிலோ என்ற அளவில் எடுத்து அரைத்து அதன் சாற்றினை 100லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல் வயலில் தெளித்தால் குலைநோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.
விவசாயிகள் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தினை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைக்கலாம்.