Asianet News TamilAsianet News Tamil

கால்நடைகளின் கழிவிலிருந்து எரிவாயு தயாரிப்பது எப்படி? இன்ச் பை இன்ச் முழு தகவலும் உள்ளே...

Natural gas from cow dung
Natural gas from cow dung
Author
First Published Jan 31, 2018, 1:14 PM IST


 

கால்நடைகளின் கழிவிலிருந்து எரிவாயு 

வீடுகளில் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள், தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வாங்கியிருக்கும் ஏழை நடுத்தர மக்கள், அந்தக் கால்நடைகளின் கழிவுகள்  மூலமாகவே சமையல் எரிவாயுப் பிரச்னையைத் தீர்க்க முடியும். 

''சமையலறைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க உதவும் வகையில், 'சக்தி சுரபி’ என்ற பெயரில் ஒரு கலனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கிறது இயற்கை வள அபிவிருத்தி மையம். 

அதன் தொடர்ச்சியாக ஒரு மாடு, நான்கைந்து ஆடுகள், கொஞ்சம் கோழிகள் வைத்திருக்கும் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக ஒரு கலனை வடிவமைத்துள்ளோம். 

நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட இந்தக் கலனில்,  உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான் (இந்த வாயு சேகரிப்பான், வாயு சேர்ந்த பிறகு மிதக்கும். இதை மிதக்கும் கலன் என்றும் சொல்வார்கள்.)  ஸ்லர்ரி (சாணக்கழிவுக் குழம்பு) வெளியேறும் பகுதி, உற்பத்தியான வாயுவை வெளியே கொண்டு செல்லும் குழாய் என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.

முதல் முறை உற்பத்தி தொடங்கும்போது... 400 கிலோ சாணத்தை, 400 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்துவிட வேண்டும். இந்த அளவு கரைசல் எப்பொழுதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர் கரைசல்' என்று பெயர். இக்கரைசலை உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம் ஊற்றி, மூடிவிட வேண்டும். 

சாணத்தில் வைக்கோல் முதலிய மிதக்கும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இந்தக் கரைசலில் 'அனோரபிக்' பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், அந்தக் கலனில் இருக்கும் மிதக்கும் கலன் ஒருவாரத்தில் படிப்படியாக உயரத் தொடங்கும்.

எரிவாயு உற்பத்தியாக உற்பத்தியாக கலன் உயரும். இரண்டு வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். உற்பத்தியான எரிவாயு, வாயு வெளிச்செல்லும் குழாய் மூலம் அடுப்பை அடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பில் தீ பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால், முதல் 5 நாட்கள் வரை உற்பத்தியாகும் வாயுவில், துர்நாற்றம் இருக்கும் என்பதால், அதை அப்படியே வெளியேற்றிவிட வேண்டும். அதன் பிறகு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

தொடர்ந்து, தினமும் கிடைக்கும் சாணத்தில், சம அளவு தண்ணீரையும் சேர்த்து, கலனுக்குள் ஊற்ற வேண்டும். எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, தேவையற்ற கழிவு (ஸ்லர்ரி) தானாக வெளியேறி விடும். இதை, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அசோலா வளர்ப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். நேரடி உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.

இக்கலனில், மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி எரு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விலையில்லா ஆடுகள் அதிகரித்து வருவதால், அவற்றின் கழிவுகளை முறையாக பயன்படுத்தினால், எரிவாயுச் செலவை மிச்சப்படுத்துவதோடு, ஊட்டமேற்றிய உரமும் போனஸாக கிடைக்கும். 

இதில், 15 ஆடுகளின் கழிவை இட முடியும். அதேபோல 50 கோழிகளின் கழிவை இதில் இட முடியும். மாடுகள் அதிகமாக இருந்தால்... சாண எரிவாயுக் கலன் மூலமாக, மின்சார உற்பத்தியும் செய்யலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios