இந்த முறையில் கரும்பு நாற்று நட்டால் இரட்டிப்பு லாபம் உறுதி…
“செதில் பரு” கரும்பு நாற்று நடும் முறையில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் இம்முறையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அருகே கந்தமங்கலம், பிடாகம், விராட்டிகுப்பம், விக்கிரவாண்டி,செஞ்சி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1 இலட்சம் ஹெக்டேர் வரை கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
விழுப்புரம், புதுச்சேரியில் உள்ள 9 சர்க்கரை ஆலைகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கரும்பு அரவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
முன்பு கரணை நடவு முறையில் அரையடி நீளமுள்ள கரணைகளை நடவு செய்து கரும்பு உற்பத்தி செய்யும் முறை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10 மாதத்தில் அறுவடை செய்யும் போது, ஏக்கருக்கு 30 முதல் 45 டன் கிடைப்பதே அரிதாக இருந்தது. ஏக்கருக்கு 30 ஆயிரம் கரணைகள் வரை நடவு செய்ய வேண்டி இருந்ததால் செலவு அதிகம் ஏற்பட்டது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் செதில் பரு முறையில் கரும்பு சாகுபடி முறைக்கு கரும்பு விவசாயிகள் மாறி வருகின்றனர். 1 இலட்சம் ஹெக்டேரில் 10 முதல் 20 சதவீதம் வரை விவசாயிகள் செதில் பரு முறைக்கு மாறியுள்ளனர்.
இம்முறையில் கரும்பில் ஓரு பரு மட்டும் எடுக்கப்பட்டு, விதை நேர்த்தி செய்யப்படுகிறது. பின்னர் 50 குழிகள் உள்ள டிரேயில் மக்கிய நார் கழிவில் ஒரு பரு கரணை நடவு செய்யப்படுகிறது.
டிரேயில் காற்று புகுந்து விடாத வகையில் 5 நாள்கள் பாலிதீன் விரிப்பு மூலம் முடி வைத்து மூடாப்பு போடப்படுகிறது.
5 நாளில் முளைப்புத் திறன் வந்ததும், ஷெட்டில் வைத்து நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்து வளர்க்கப்படுகிறது.
15 நாளில் ஓன்றரை அடி வரை நாற்று வளர்ந்த பின்னர் ஷெட்டிலிருந்து வெளியே எடுத்து வைத்து வளர்க்கப்படுகிறது.
30 நாள்களில் நாற்று 2 அடி உயரம் வரை வளர்ந்ததும் விவசாயிகளுக்கு நாற்று நடவுக்கு வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் சர்க்கரை ஆலை நிர்வாகங்களே 14 விவசாயிகளிடம் ஓரு பரு செதில் நாற்று உற்பத்தி செய்ய ரூ.1 வழங்குகிறது.
30 நாள் பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுக்களை விவசாயிகளுக்கு ரூ.1.25-க்கு வழங்குகிறது.
ஒரு ஏக்கருக்கு 2 அடிக்கு ஓரு நாற்று வீதம் 5,000 முதல் 5,500 நாற்றுகள் வரை நடவு செய்யலாம். நடவு செய்யும்போது தண்ணீர் பாய்ச்சிய வயலில் 1 கிராம் டி.ஏ.பி-யுடன், அரை கிராம் குருணை கலந்து நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த 20-வது நாளில் நாற்றில் இருந்து கிளை வரத் தொடங்கும். அப்போது முதலில் வளர்ந்த ஒருபரு செதில் நாற்றை வெட்டி விட்டால் மேலும் அதிக நாற்றுகள் வளரும்.
தொடர்ந்து முறையாகப் பராமரித்தால், ஏக்கருக்கு குறைந்தது 80 முதல் 106 டன் வரை கரும்பு உற்பத்தியாகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது.
இம்முறையில் உற்பத்தியாகும் கரும்பு ஒவ்வொரு கணுவுக்கும் அதிக இடைவெளி இருப்பதுடன் திரட்சியாகவும் காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருபரு செதில் முறையில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆலைகளின் மூலம் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அதிக உற்பத்தியுடன், குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் 20 சதவீத விவசாயிகள் ஒரு பரு செதில் முறைக்கு மாறி வருகின்றனர்.