வெள்ளாடுகளை வளர்க்கும்போது அவற்றில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள்...
வெள்ளாடுகளை வளர்ப்பில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள்:
தீவனம்
** வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது. அவை உயிர்வாழ மட்டுமல்லாது. மனிதனுக்குப் பயனுள்ள இறைச்சிக்கும் பால் உற்பத்திக்காகவும் ஆகும். மற்ற உயிரினங்களைப் போன்றே ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள், கொழுப்பு.
** உடல் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான புரதம் மற்றும் தாது உப்புகள், வைட்டமின்கள் தேவை. உணவுப் பொருட்கள் செரிக்கவும். உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை.
** உடலில் 20% நீர் குறைவுபட்டால் உயிர் வாழ முடியாது. நீர் சத்துப் பொருள் எனப்படாவிட்டாலும், அது உணவுடன் இன்றியமையாதது ஆகும். இது குறித்து முதலில் விவாதிக்கலாம்.
** சத்துப் பொருள்களான மாவுப் பொருள், கொழுப்பு மற்ற உயிரினங்கள் போல் ஆடுகளுக்குத் தேவைப்படும். அத்துடன் அசைபோடும் விலங்கினங்கள் அவற்றிற்குத் தேவையான எரி சக்திப் பொருனை நார்ப் பொருட்களிலிருந்தும் பெறுகின்றன.
** நார்ப் பொருட்கள் நுண்ணுயிர்களால் தாக்கப்பட்டு, அசிடிக், புரோப்பியோனிக் மற்றும் புயூட்ரிக் அமிலங்கள் பெறப்படுகின்றன. இவை இரத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, சர்க்கரைப் பொருளாகவும் மாற்றப்படுகின்றது.
** ஆகவே பெரு வயிறு திறம்பட வேலை செய்ய வெள்ளாடுகளுக்கு நார்ப் பொருள் நிறைந்த தீவனமும் தேவைப்படுகின்றது. இவ்வாறாக நமது உணவுடன் போட்டியிடாமல் இலை, தழை, புல், பூண்டுகளை உண்டு வெள்ளாடுகளால் வாழ முடிகின்றது.
தண்ணீர்
** ஆடுகளுக்குச் சுத்தமான நீர் எப்போதும் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நலம். முடியாத நிலையில் 2, 3 முறை நீர் வழங்குவது நல்லது. ஆடுகள்தானே எனத் தூய்மையற்ற நீரைக் குடிக்கக் கொடுக்கக் கூடாது.
** பொதுவாக ஏழைகள் ஊறல் தண்ணீர் என்று புளித்த சமையல் கழிவு நீரைச் சேமித்து வைத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். இது சிறந்த முறையன்று. அரிசி, பருப்பு அலசிய நீரை உடனடியாகக் கொடுத்து விடுவதே சிறந்தது.
** மேலும், தூய்மையற்ற நீர் நிலைகளின் நீர் மூலம் தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆட்டுப் பண்ணை அமைக்க விரும்புபவர்கள், நமது குடிநீர் போன்ற தரமான நீர் ஆடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
** ஆடுகளுக்கு எவ்வளவு நீர் தேவை? இது ஆடுகளின் வகை, வளர்க்கப்படும் முறை, வளர்க்கப்படும் பகுதியின் காலநிலை ஆகிய சூழ்நிலையின்படி மாறுபடும். எடுத்துக்காட்டாக, இராஜஸ்தான் பாலைப் பகுதியில் வெள்ளாடுகளுக்கு வாரம் மூன்று முறை மட்டும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகின்றது.
** நமது சூழ்நிலையில் வெள்ளாடு தனது தேவை அறிந்து தண்ணீர் குடிக்க ஏதுவாக அது குடிக்கும் அளவு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நான் வளர்த்த ஒரு வயது ஆடு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தது. பொதுவாக அது உண்ணும் தீவனத்தில் காய்வு நிலையில் நான்கு மடங்கு நீர் அருந்தும்.