விவசாயத்தைக் காட்டிலும் கால்நடைவளர்ப்பு மூலம் மும்மடங்கு லாபம் எடுக்க முடியும். எப்படி?
கால்நடை வளர்ப்பு
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான்.
பசு, எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத அமைதியான பிராணி. அதனால்தான் குதிரையைக் காட்டிலும் மனிதனால் அது அதிகமாக நேசிக்கப்பட்டு, அவனுடனேயே வாழும் ஒரு பிராணியாக இன்று வரை இருந்து வருகிறது.
மனிதனுக்கு தேவைப்படாத உணவினை சாப்பிட்டு, பயனுள்ள பல பொருட்களை தருகிறது. அது தரும் பால் உணவாகிறது. கோமியமும், சாணமும் உரமாகிறது. ஆடும் அதே போலத்தான்.
இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தை மட்டும் செய்தால் லாபம் கிடைக்காது. கூடவே அதன் துணைத்தொழிலான கால்நடை வளர்ப்பினையும் கட்டாயம் செய்ய வேண்டும்.
பொதுவாக நூறு ஆடுகளை வளர்க்கும் ஒரு விவசாயிக்கு, ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட நூறு குட்டிகள் வரை கிடைக்கிறது. ஆடுகளோட கழிவுகளின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைக்கும். விவசாயத்தைக் காட்டிலும் கால்நடைவளர்ப்பு மூலம் மும்மடங்கு லாபம் எடுக்க முடியும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டால் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்தான் வருமானம் வரும். ஆனால், அதே நிலத்தில் ஐந்து பால் மாடுகள் வளர்த்தால் பால் வியாபாரம் மூலமாகவே கிட்டத்தட்ட 56 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இதுபோக சாணம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும். கன்றுகள் அதனினும் கூடுதல் வருவாயான ஒரு விஷயமே. ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம்தான் பிரச்னையாக இருக்கிறது.
ஒரு ஏக்கர் நிலத்தில் முறையாக பசுந்தீவனம் வளர்த்து ஐந்து மாடுகளையும் பராமரித்து வந்தால் அந்த விவசாயி நல்ல லாபம் பார்க்க முடியும்.