குறைந்த செலவில் புளியமரத்தை இப்படியும் சாகுபடி செய்யலாம்...
புளியமரம் சாகுபடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
ரகங்கள்
புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர் மற்றும் ஹாசனூர் என்பது மேலும் சில ரகங்கள் ஆகும்.
நாற்று பெறும் முறை
உரிகம் ரகம் தருமபுரியில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் பிகேஎம் ரகம் பெரியகுளம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையில் கிடைக்கும். விதைகளை வைத்தும் நாற்று தயாரிக்கலாம்.
நடவு முறை
உரிகம் ரகத்தை நடுவதற்கு 6 x 6 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அடர் நடவு முறையில் பிகேஎம்1 ரகத்தை 5 X 5 மீட்டர் இடைவெளியில் நடலாம்.
சித்திரை – வைகாசி மாதங்களில் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் காய்ந்த இலை தழைகளை போட்டு தீ எரித்து சாம்பலாக்கி வைக்க வேண்டும்.
பிறகு அந்த குழியில் சிறிதளவு போர் மண், மணல் மற்றும் குப்பை கொண்டு 1 அடி மூடவேண்டும். அதை அப்படியே ஆடி மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு அதில் புளியங்கன்றை நடவு செய்யலாம்.
நீர்ப்பாசனம்
கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு தேவைகேற்ப நீர் பாய்ச்சினால் போதும்.
ஊடுபயிர்
அறுவடைக்கு வரும் வரை கடலை, உளுந்து, எள்ளு, பாசிபயிறு போன்றவைகளை நாம் ஊடுபயிர் செய்யலாம். குறைந்த உயரம் வளரும் பயிர்கள் ஊடுபயிர் செய்ய ஏற்றது.
அறுவடை
உரிகம் ரகம் 5 முதல் 8 வருடம் வரை பூ வைத்து பிறகு காய் பிடிக்கும். இதற்கு பருவநிலை மிகவும் முக்கியம். பிகேஎம் ரகம் 3 வருடம் முதல் பூ வைத்து 5 வருடத்தில் காயப்பிற்கு வரும்.