உருளைக் கிழங்குக்கு மாற்றாக ஒரு பாரம்பரிய ஊடுபயிர்!
காவளிக் கிழங்கு… வாயுத் தொல்லைக்குப் பயந்து, கிழங்கு என்றாலே, காத தூரம் ஓடும் பலருக்கும் வரப்பிரசாதம்! ஏனெனில், இது மண்ணுக்குக் கீழே காய்ப்பதில்லை.
இத்தகைய பாரம்பரியப் பெருமை மிக்க இக்கிழங்கை, விவசாயிகள் பலருமே மறந்து போய்விட்ட சூழலில்… இயற்கை விவசாயிகள் சிலர் இன்னமும் சாகுபடி செய்து பாதுகாத்து வருகிறார்கள்.
அப்படி பாதுகாத்து வரும் சீர்காழி அருகேஉள்ள தாண்டவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி புலவர். ராசாராமன், காவளிக் கிழங்கு பெருமை பேசுகிறார் இங்கே…
உருளைக்கிழங்குக்கு மாற்று!
”நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட உணவுப்பொருட்களைத்தான் பயிர்செய்து வந்தார்கள். ஆண்டு முழுவதுக்குமான அவர்களின் உணவுத்தேவையை வீட்டுக் கொல்லைப்புறத்தில் இருந்து கிடைப்பவற்றை வைத்தே பூர்த்தி செய்து விடுவார்கள்.
புடலை, அவரை, வெண்டி, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகல், கொத்தவரை, துவரை, கடலை என அனைத்தையும் வீட்டைச் சுற்றியே சாகுபடி செய்து விடுவார்கள்.
அந்த வகையில், மலைப்பிரதேசங்களில் விளையும் உருளைக்கிழங்குக்கு மாற்றாக சமவெளிப் பகுதிகளில் விளைய வைத்து வந்த கிழங்குதான் இந்த காவளிக் கிழங்கு”.
”இந்தக் கிழங்கை உணவுக்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விதைக்காக தனியாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இது வாயுத் தொந்தரவு, சர்க்கரை பிரச்னை… என எதையும் உண்டு பண்ணாது. மார்கழி கடைசி அறுவடைக்கு வரும் காவளிக்கிழங்கை, அப்படியே பறித்துப் போட்டு வைத்து விட்டால், அடுத்த ஆடி மாதம் வரை அப்படியே இருக்கும். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாத்தாலே போதுமானது. உருளைக்கிழங்கில் என்னென்ன கறி சமைக்கிறோமோ… அத்தனையையும் இதில் செய்யலாம். அதே சுவை இருக்கும்.
ஒரு கொடியில் 50 கிழங்குகள்!
உண்மையிலேயே இதைத்தான் ‘ஜீரோ பட்ஜெட்’ என்று சொல்ல வேண்டும். இதற்காக எந்தச் செலவும் தேவையில்லை. ஒரே ஒரு கிழங்கை மட்டும் வாங்கி, மண்ணில் பதித்து வைத்தால், அது முளைத்து கொடியாகி, அதில் ஐம்பது கிழங்குகள் வரையிலும் காய்க்கும். முதலில் காய்க்கும் காய் ஒரு கிலோ அளவுக்கு எடை வரும். அடுத்து வரும் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்து கொண்டே வரும். கடைசியாக காய்க்கும் காய் வெறும் ஒரு கிராம், இரண்டு கிராம் எடையில்தான் இருக்கும். ஆடி மாதத்தில் இவை முளைக்கத் தகுந்த தட்பவெப்பம் நிலவுவதால், தானாகவே முளைத்து குருத்து வந்துவிடும். அந்தப் பருவத்தில் மரப்பயிர்களின் அருகில், இந்தக் கிழங்குகளை விதைத்துவிட வேண்டும். இதில் பூ பூப்பதில்லை. நேரடியாகக் காய் காய்த்துவிடும். ஐம்பது நாளில் முதல் காய் கிடைக்கும்.
இதில், ‘ஆட்டுக் கொம்புக் காவளி’ என்று ஒரு ரகம் இருக்கிறது. இது 100 கிராம் அளவுக்குத்தான் காய்க்கும். இக்கிழங்கில் ஒரு சிறியக் கொம்பு இருப்பதால்தான் இந்தப் பெயர். இதையும் உணவாகப் பயன்படுத்தலாம்” என்ற ராசாராமன், உருளைக்கு மாற்றான இன்னொரு கிழங்கு பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
”பெருவள்ளிக்கிழங்கு என்று ஒன்று உள்ளது. இது கொடி வகையாக இருந்தாலும், மற்ற கிழங்குகள் போல மண்ணுக்கு அடியில் காய்க்கக்கூடியது. ஒரு கிழங்கு பத்து கிலோ வரையிலும் கூட இருக்கும். ஓராண்டு வரை, தோண்டாமல் விட்டு விட்டால்… இருபது கிலோ வரை கூட வரும். இதையும் ஒரு வருடம் வரை வைத்திருந்து உருளைக்கிழங்குக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். வேறு எந்தக் கிழங்குகளையுமே விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
செலவில்லாத உணவு!
இந்த அனைத்துக் கிழங்குகளுக்கும் விதைப்பதைத் தவிர வேறு செலவுகளே இல்லை. கிழங்கு முளைத்து, கொடி வெளியில் வந்ததும் அருகில் உள்ள மரத்தில் ஏற்றி விட்டால் போதும். பூச்சித்தாக்குதல் கிடையாது. மரத்தோடு சேர்ந்து, தன் உணவை, தானே தயாரித்துக் கொள்ளும். அதனால் உரச் செலவும் கிடையாது. ஆடு, மாடுகளும் சாப்பிடுவதில்லை.
மொத்தத்தில் செலவில்லாமல் ஒரு வருட உணவுத் தேவையை சமாளிக்கும் கிழங்கு வகைகள் இவை. இதன் அருமை உணர்ந்துதான் எங்கள் தாத்தா, அப்பாவுக்குப் பிறகு நானும் தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன். என்னிடமிருந்து கிழங்கு வாங்கிச்சென்று நிறையபேர் தற்போது உற்பத்தி செய்து வருகிறார்கள்” என்றார் அரசன்…