தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் கூட குதிரைவாலி பயிர் செய்தால் நிச்சயம் மகசூல் கிடைக்கும்...
புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள்.
இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் உணவாக மாறி வருவது, ஆமாம். அவ்வளவு விலை.
மழையை மட்டுமே நம்பி இரண்டரை ஏக்கர் வானவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்தால் கூட அதுவே குதிரைவாலிக்கு போதும். கடுமையான வறட்சியால் மற்றவை முற்றிலும் கருகி விட்டாலும், குதிரைவாலி வளர போதுமான அளவு தண்ணீர் இருந்தாலே போதும். இரண்டே இரண்டு மழையில் விளைச்சல் தரக்கூடியது.
நெய்க்கரிசல் நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மை, பெய்த மழையைச் சொட்டுக்கூட வீணாக்காமல் பயிர்களுக்குக் கொடுத்து விளைச்சலை வழங்கும். ஏக்கருக்குச் சராசரி 650 கிலோ குதிரைவாலியும் 100 கிலோ துவரம் பயிறும் கிடைக்கும்.
குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.
ஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். இப்போது இதன் சந்தை விலை கிலோ ரூ.30 முதல் 40 வரை;
காவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.