இந்த பயிரை சாகுபடி செய்தால் உங்கள் மரத்தில் பணம் கொட்டும்…
தென் இந்திய உணவு வகைகளின் மணமூட்ட பயன்படுத்தப்படும் முக்கியமான வாசனைப் பயிர் கறிவேப்பிலையாகும். இதில் மருத்துவக் குணம் அதிகம் உள்ளது. உணவில் நச்சுப்பொருட்களை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
வீட்டு காய்கறி தோட்ட சாகுபடியில் மிகவும் அதிகமாக விரும்பி பயிரிடப்படும் வாசனைப் பயிர்களில் கருவேப்பிலை முக்கியமானது ஆகும்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு பணத்தை கொட்டுகிறது.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கறிவேப்பிலை நடவு செய்ய சிறந்த பருவமாகும். மேலும் தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடம் முழுவதும் நடவு செய்யலாம்.
கறிவேப்பிலை பொதுவாக எல்ல வகையான மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மையுடையது. ஆனால் ஊட்டமிக்க செம்மண் வகை மிகவும் ஏற்றது.
பொதுவாக நீர் தேங்காத மண் வகையாக இருந்தால் நன்றாக வளரும் தன்மையுடையவை. கறிவேப்பிலையில் டி.டபிள்யூ-1, டி.டபிள்யூ-2 என்ற ரகங்கள் உள்ளன. இந்த ரகங்கள் அதிக எண்ணெய் சத்து மற்றும் வாசனையும் கொண்டதாகும்.
கறிவேப்பிலை பொதுவாக விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நன்கு பழுத்த பழங்களை பறித்து உடனே தோல் நீக்கியோ அல்லது அப்படியே நில மேடை பாத்திகளில் வரிசையாக ஊன்ற வேண்டும்.
விதைத்த 20 நாட்கள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும். பின்பு இரண்டு முதல் மூன்று மாத நாற்றுக்களை பிடுங்கி, கலவை மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் நட்டு, பாதுகாக்க வேண்டும். ஒரு ஆண்டு முதல் ஒன்றரையாண்டு வயதுடைய நாற்றுகளையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். பின்பு நடவுக்கு ஒரு மாதத்திற்கு பின் 4 அடி முதல் 6 அடி வரை இடைவெளியில் வரிசையாக 30 செ.மீ ஆழம் குழிதோண்டி ஆரப்போட வேண்டும்.
அதன்பின் 10 கிலோ முதல் 15 கிலோ மக்கிய தொழு எருவை மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். கோடை காலத்தில் இளஞ்செடிகளுக்கு நிழல் அமைத்தல் முக்கியமானதாகும். நாற்றுகளை நட்டவுடன். நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும். பின்பு நட்ட மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வருடம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோ வரை தொழு எரு அல்லது கம்போஸ்ட் இட வேண்டும். மேலும் 150 கிராம் தழைச்சத்து, 25 கிராம் மணிச்சத்து, 50 கிராம் சாம்பல் சத்து கலந்து மண் அணைக்க வேண்டும்.
அதன்பின் தேவைக்கேற்ப வருடத்திற்கு வருடம் உர அளவினை அதிகப்படுத்தி செல்ல வேண்டும்.
பொதுவாக கறிவேப்பிலை தோட்டத்தில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஆகையால் செடியைச் சுற்றியுள்ள களைகளை வெட்டி சுத்தம் செய்து, வட்டம் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மேலும் மழை இல்லாத காலங்களில் காய்ந்த மண்ணின் ஈரப்பதம் காப்பதோடு, செடி நன்றாக வளர ஏதுவாகிறது. 1 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் கவாத்து செய்து மட்டம் போட வேண்டும்.
இலை அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு மருந்து தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். அறுவடை நாட்களில் மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரு ஆண்டு கழித்து, ஒரு எக்டேர் நிலத்தில் 400 கிலோ கறிவேப்பிலை மகசூல் கிடைக்கும்.
இரண்டு, மூன்று வருடங்கள் கழித்து ஒரு எக்டேருக்கு 2500 கிலோவும், ஐந்து வருடங்கள் கழித்து 3500 முதல் 5000 கிலோ வரையும் கறிவேப்பிலை மகசூல் கிடைக்கும்.
நன்கு பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரம் 25 வருடங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கிறது.