வான்கோழி இறைச்சி மிருதுவாகவும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை தயாரிக்க ஏற்றதாகவும் இருப்பதால் வியாபார ரீதியாக சிறந்த இறைச்சியாக உள்ளது. கால்நடை சார்ந்த தொழில்களில் ஈடுபட விரும்புபவர்கள் வான்கோழி பண்ணைகளை தொடங்குவதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும்.

வான்கோழி பண்ணை

வான்கோழிகள் குறுகிய காலத்தில் துரிதமாக வளர்ச்சியடைவதால் வான்கோழி வளர்ப்பு லாபகரமானதாக இருக்கிறது. வான்கோழிகளை வளர்க்க தோப்புகள், மானவாரி நிலங்களில் பண்ணைகளை அமைக்கலாம். இறைச்சிக்காக இவற்றை வளர்க்கும் போது கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி இடம் என்ற கணக்கில் 500 வான்கோழிகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 சதுர அடியில் 20 அடி அகலத்தில் கொட்டகைகளை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். உள்புறம் சிமெண்ட் பூச்சு அவசியம். பக்கவாட்டில் ஒன்றரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி அதற்கு மேல்  அடி அளவுக்கு கம்பி வலை பொருத்த வேண்டும். தரையில் நெல் உமி அல்லது தென்னை மஞ்சியை பரப்ப வேண்டும்.

குஞ்சுகள் வாங்கி பராமரித்தல்

வான்கோழி இனத்தில் அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், சிலேட்டு நிற கலப்பினம் அல்லது பெல்ஸ்வில்லி கலப்பினம் ஆகிய இனங்கள் இறைச்சிக்கான சிறந்த இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வளர்க்க தேர்வு செய்யும் ரகத்தை ஒரு மாத வயதுள்ள குஞ்சுகளாக வாங்கி வளர்த்தல் நல்லது.

அடைகாப்பானில் வைத்தல்

இளம் குஞ்சுகளுக்கு முதல் 3 வார வயது வரை செயற்கையான புருடிங் முறையில் வெப்பம் அளித்தல் வேண்டும். இதற்கு ஒன்றரை அடி உயர அட்டை அல்லது தகட்டினை 6 அடி விட்டத்திற்கு வைக்க வேண்டும். அடைகாப்பானின் நடுவில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மின்விளக்குகள் பொருத்தி எரிய விடவேண்டும். ஒரு 6 அடி விட்டமுள்ள அடைகாப்பானுக்குள் 150 குஞ்சுகள் வரை விடலாம். குஞ்சுகளுக்கு நாள் ஒன்றிற்கு 5 அல்லது 6 முறை தீவனம் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.

வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்தல்

வான்கோழி குஞ்சுகளுக்கு முதல் 4 வாரங்களுக்கு 28 சதவீதம் புரதம் அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும். பண்ணையில் சுயமாக தீவனம் தயார் செய்ய மக்காசோளம் மற்றும் கம்பு - 40 சதவீதம், சோயாபுண்ணாக்கு- 38%, மீன்தூள்- 95%, தவிடு வகைகள்- 10%, எண்ணெய்- 1%, தாதுஉப்பு- 3%, உயிர்சத்துகள்- 50 கிராம் என்ற அளவில் கலந்து அரைத்து கொள்ளலாம். குஞ்சுகளின் வயதிற்கு ஏற்றபடி இந்த தீவன பொருட்களில் சிலவற்றை அதிகப்படுத்தியோ, குறைத்தோ கலந்து தீவனங்களை தயார் செய்யலாம்.

தீவனங்களை தயார் செய்ய இயலாத நிலையில் பெரும்பாலும் குஞ்சுகள் வாங்கும் இடத்தில் 3 முதல் 4 மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குச்சி தீவனமாக இருப்பின் நல்லது. காரணம் இதில் அனைத்து சத்துகளும் சமசீரான அளவில் கிடைக்கிறது. தீவனம் வீணாவது குறைவு. மேலும் தீவன மாற்று திறனும் அதிகரிக்கிறது.

நோய் பராமரிப்பு

குஞ்சுகளுக்கு முதல் வார வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தும், பின்னர் அம்மை தடுப்பு ஊசியும் 1 மாத இடைவெளியில் அளித்தல் அவசியம். தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தையும் 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.
இறைச்சி விற்பனை

வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்து முடித்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். தீவனம் முறையே 4 கிலோவும், 6 கிலோவும் உட்கொண்டிருத்தல் வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதற்கு மிருதுவாக இருக்காது.

எனவே, வான்கோழிகளை 12 முதல் 16  வார வயதிற்குள் விற்பதும், வாங்குவதும் நல்லது. பிரியாணி, சிக்கன் 65 உள்பட பிராய்லர் இறைச்சி மூலம் தயாரிக்கப்படும் அனைத்து அயிட்டங்களையும் வான்கோழி இறைச்சியிலும் பண்ண முடியும்.