இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் எப்படி தயாரிக்கணும்? இந்த வழி உதவும்...
தமிழக விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் அதிகளவில் பச்சையாக இருக்க வேண்டும் என பயிர் மற்றும் செடிகள் நட்டவுடன் நன்றாக வளர்ச்சி காணப்படும்போது தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதனால் பயிர்களின் வளர்ச்சி, குறைந்த கால அளவில் அதிகமாக காணப்பட்டாலும் அதிகளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக அதிகளவு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல சமயங்களில் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டு மகசூல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை:
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.
பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.