துவரையை ஊடுபயிராக பயிரிடுவது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்...
துவரையை ஊடுபயிராக பயிரிடலாம். இதனால் தண்ணீர் பிரச்னையும் இல்லை. நாற்று, நடவு, களை, கூலி ஆட்கள் போன்ற பிரச்னையும் இல்லை.
நெல்லைப் பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை. முளைத்த பயிர் வாடுகிறதே என அதிர்ச்சியில் உயிரையும் விடவேண்டியதில்லை.
நெல்லுக்கு மாற்றாக இனி டெல்டா மக்கள் துவரையைப் பயிரிடலாம். நீரில்லாவிட்டாலும் செழிப்பாக வளர்ந்து பயன் தரும்.
நெற்பயிரைச் சாகுபடி செய்பவர்கள் எல்லா வேலைகளுக்கும் கூலி கொடுத்தே கட்டுபடியாகவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரச்னை இந்த துவரைச்சாகுபடியில் இல்லை.
ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் குறைந்தபட்சம் ஏழு அடி இடைவெளியே இருக்கவேண்டும். அப்போதுதான் செடி நன்கு பரந்து விரிந்து வளரும். டெல்டா மாவட்டத்தில் பல நிலங்கள் வறட்சி பூமியாக மாறி பொட்டால் காடாகி வருகிறது.
இது பொட்டல் காட்டிற்கு ஏற்ற பயிர். நல்ல நிலமாக இருந்தால் அதில் உளுந்து பயிர் போட்டுக்கொள்ளலாம். துவரையை மானாவாரி விதைப்பு செய்து பத்து நாட்கள் கழித்து மழை பெய்தாலும் முளைத்துவிடும்.
குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஊடுபயிராக போடுவதால் இது நமக்கு தனி வருமானமாக அமைந்துவிடும். நெல்லை விதைத்துவிட்டு மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று புலம்புவதைக்காட்டிலும் காலத்திற்கு ஏற்றபடி அனைவரும் துவரைச் சாகுபடிக்கு மாறுவது சிறந்த பயனைக்கொடுக்கும்.