மண்

அறுபது சென்ட் நிலத்தை 4 பாகமாகப் பிரித்து, ரொட்டவேட்டர் கொண்டு உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக்க வேண்டும்.

பொலபொலப்பாக்கிய மண்ணைக் கொண்டு 25 அடி நீளம், 4 அடி அகலமென, சுமார் 3/4 அங்குல உயரத்தில், 1 அடி இடைவெளியில் சுமார் 156 மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்.

அடிஉரம்

மேட்டுப்பாத்தி அமைத்து மேல் மண்ணில் உரமிடவேண்டும். கீரைச் சாகுபடியின் போது பயன்படுத்திய உரங்கள்,  நெல் உமி சாம்பல், மாட்டெருவு 4 டிராக்டர், 25 கிலோவில் 50 மூட்டை மரத்தூள், 156 மேட்டுப்பாத்தி, உரக்கலவை. இவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு மேட்டுப்பாத்தியிலும் 1/2 அங்குல கனத்திற்குப் பரப்பிவிட வேண்டும்.

கீரையின் வேர் ஆழமாகச் செல்லாததினாலும், மேலோட்டமான வேர் உள்ளதாலும், மேல் மண்ணில் உரத்தை பரப்பிவிடணும்.

பயிர் செய்யும் கீரை…

சிறுகீரை, அரைக்கீரை, பாலக் கீரை, தண்டங்கீரை (சிகப்பு, பச்சை), முளைக்கீரை (சிகப்பு, பச்சை), மணத்தக்காளி (சுக்கிட்டி கீரை), வெந்தையம், மல்லி… போன்றவைகளைப் பயிர்செய்யலாம்.

கீரை உற்பத்தி மட்டுமே பிரதானம் என்பதால் விதை உற்பத்தி சாத்தியப்படுவதில்லை. தேவையான விதைகளை முன்னோடி ஜீரோ பட்ஜெட் விவசாயிகளிடமிருந்து சேகரித்துக் கொள்ளலாம்.

விதை நேர்த்தி

விதைகளை ஒரு மணி நேரம் வெயிலில் உலர்த்தி, பின்பு மாலை வேளையில் விதைப்பு செய்ய வேண்டும். பாலக், அகத்தி, மல்லி, வெந்தயம் போன்றவற்றை முதல் நாள் இரவே பஞ்சகவ்யாவில் ஊற வைத்து மறுநாள் அதை உலர்த்தி விதைக்கலாம்.

சிறுகீரை, அரைக்கீரை போன்றவைகளை ஒரு மேட்டுப்பாத்தியில் 70 கிராம் விதையைச் சுமார் 200 கிராம் மணலுடன் கலந்து தூவ வேண்டும்.

பாலக், வெந்தையம், மல்லி இம்மூன்றிற்கு மட்டுமே மண்ணைக் கீரிவிட்டு விதைபோட்டு மூடவேண்டும். மற்ற வகைக்கீரைகளைத் தூவிக் கிளறிவிட வேண்டும். இவைகள் அடர்த்தியாக வளரும்.

பாசனத் தொழில்நுட்பம்

மேட்டுப்பாத்தி அமைப்பதினால் கீரைகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனமே சிறந்தது. மேட்டுப்பாத்தி அமைத்துக் காய்கறிச் சாகுபடி செய்ய சொட்டுநீர்ப் பாசனம் பயன்படுத்தலாம்.

5 ஹெச்.பி மோட்டார் உள்ளது – தெளிப்பு நீர்ப் பாசனம்.

60 சென்ட் நிலம் – 70 தெளிப்பு நீர்க் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன, 2 KG output pressure – 1 மணி நேரத்திற்கு 500 லிட்டர் நீர் டெலிவரி ஆகும், 70 தெளிப்பு நீர்க் கருவிகளை 4 பாகங்களாகப் பிரிக்கலாம்,

1 பாகத்திற்கு 16 தெளிப்பு நீர்க் கருவிகள் செயல்படும், தேவையான பிரஷ்ஸர்க்குத் தகுந்தாற்போல் பாகத்திலுள்ள தெளிப்புநீர் கேட்வால்வைத் திறந்து / அடைத்துக் கொள்ள வேண்டும்.

பாசனத் தொழில்நுட்பத்தில் உள்ள சூட்சுமமே தினந்தோறும் தண்ணீர் விட வேண்டும். மிகமுக்கியமாக காலை, மாலை என இருவேளையிலும் தண்ணீரைப் பிரித்து விட வேண்டும்.

காலையில் 10 நிமிடமும், வெயில் சற்று அதிகமாக இருந்தால் 11 மணிக்கு 5 நிமிடமும், கீரைகள் வாட்டமாகாமல் இருக்கக் கொடுக்க வேண்டும். மாலையில் சற்று அதிக நேரமாக சுமார் 15 நிமிடம் வரை நீர் கொடுக்க வேண்டும்.

உரம், பூச்சி விரட்டி…

பஞ்சகவ்யா, அமுத கரைசல், மீன் அமிலம், பழக்காடி, பூச்சி விரட்டி போன்றவைகளைத் தயார் செய்யும் முறைகள்.

அமிர்தகரைசல்

சாணம் மற்றும் கோமியம் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நிலத்தினுடைய வளமான மேல் மண் ஒரு கைப்பிடி அளவு. நாட்டுச் சர்க்கரை 200 கிராம் (1 கிலோ சாணம் மற்றும் கோமியத்திற்கான அளவு). இந்த நான்கையும் ஒருசேர வாளியில் கலந்து, நிழல்பாங்கான இடத்தில் வைத்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கலக்கி விட வேண்டும். 24 மணி நேரத்தில் அமிர்தகரைசல் தயாராகிவிடும். இவ்வளர்ச்சி ஊக்கியைத் தண்ணீர் பாய்ச்சும் போது கலந்து விடலாம். ஸ்பிரே செய்ய 300 மி.லி ஒரு டேங்கிற்கு (10 லிட்டர் தண்ணீர்) கொடுக்கலாம்.

செயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விளை பொருளை உண்பவருக்கு கேடு வருகிறேதோ இல்லையோ. அதன் தாக்கமும், பாதிப்பும் விவசாயியை நேரடியாக பாதித்துவிடுகிறது. நம்மைப் பாதுகாக்கவே இயற்கை விவசாயம்.

பூச்சிக் கொல்லி, களைக் கொல்லி ஆகியவைகள் தெளிக்கும் போது நம் மூச்சுக் காற்று, கையில் படிவது போன்ற பல வகைகளில் நேரடியாக விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான் தீய பழக்கங்கள் இல்லா விவசாயப் பெருங்குடிமக்களுக்கும் புற்றுநோய் ஏற்படுகின்றது.

எத்தனை முறை பூச்சிக் கொல்லி, வளர்ச்சி யூக்கி என்று கீரைகளின் மீது தெளிக்கப்படுகிறது என்று நுகர்வோர் ஒரு முறை சென்று நேரில் கண்டால் அதிர்ச்சி காத்திருக்கும்.

மேலும், இரசாயன உணவு உற்பத்தியினால் மொத்த உயிரினமும் சுற்றுப்புறச்சூழலும் பெரிய அளவில் நோயுற்று கிடக்கிறது

இதனைத் தடுக்க இயற்கை முறைக்கு அனைத்து விவசாயிகளும் மாறுவது மிக அவசியமானது.