மாடுகளை அதிகமாகத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

How to control throat coccosis of cows
How to control throat coccosis of cows


மழைக்காலங்களில், மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் போதும், ஊட்டச்சத்து குறையும் போதும், தட்பவெப்பநிலைகளில் மாறுதல் ஏற்படும் போதும், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போதும், ஆண்மை நீக்கம் மற்றும் டிப்பிங் என்னும் புறஒட்டுண்ணி நீக்கம் செய்யும் போதும் கால்நடைகள் சோர்ந்து போகும்.

இந்த நேரங்களில் தொண்டை அடைப்பானுக்கு காரணமான பாக்டீரியாக்கள் வீரியம் அடைந்து நோயை ஏற்படுத்துகின்றன.

தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள்

தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் 103 டிகிரி முதல் 108 டிகிரி வரை அதிக காய்ச்சல் இருக்கும்.

மாடுகள் சோர்ந்து காணப்படுவதுடன் தனது இடத்தை விட்டு நகரக்கூட மனம் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும்.

காய்ச்சல் காரணமாக மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு இருக்கும். தீவனம் தின்னாமலும், வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்து கொண்டும் இருக்கும்.

குரல் வளை வீக்கம் அடைவதால் மூச்சு திணறும். நாக்கு வீக்கம் அடைந்து நாக்கை வெளியே தள்ளி கொண்டிருக்கும். இதன் காரணமாக தீவனத்தையும், தண்ணீரையும் பருக முடியாமல் அவதிப்படும்.

கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல் சிவந்து காணப்படும். மூக்கில் இருந்து ரத்தமும், சளியும் வடிந்து கொண்டிருக்கும். பல் நறநறவென்று கடித்து கொண்டும், வயிற்று வலி ஏற்பட்டும், மூக்கு பகுதியில் ஈரம் இல்லாமல் காய்ந்து வறண்டு போய் இருப்பதுடன், பால் உற்பத்தி குறைந்தும் காணப்படும்.

மூச்சு திணறல் காரணமாக தொண்டை பகுதியிலும், முன் கழுத்து பகுதியிலும், முன்னங்கால்களுக்கு இடையே வீக்கம் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படும்.

இந்த அறிகுறிகள் கண்ட 2, 3 நாட்களில் மாடுகள் இறந்து விடும். தொண்டை மற்றும் கழுத்து பகுதியில் தொட்டு பார்த்தால், சூடாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.

நோய் பரவும் முறை

நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை தொடர்பு கொள்ளும் போதும், நோயுற்ற மாடுகளை வெளிவிடும் மூச்சிலும் உள்ள கிருமிகளை மற்ற மாடுகள் சுவாசிப்பதால் இந்த கிருமிகள் பரவும்.

முறையாக முன்கூட்டியே தடுப்பூசி போடாமலும், சரியாக பராமரிக்கப்படாமலும் இருக்கும் கால்நடைகளுக்கும், உமிழ்நீரின் மூலமும், தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூலமும், நோய் தாக்கப்பட்ட மாடுகள் உண்ட தீவனத்தை மற்ற மாடுகள் தின்னும் போதும் இந்த நோய் பரவுகிறது.

கட்டுப்படுத்தும் முறை

தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் பாதிக்கப்பட்ட மாடுகளை அப்புறப்படுத்தி தனியாக வைத்து மருத்துவம் செய்ய வேண்டும்.

கால்நடைகளை கட்டி வைத்திருக்கும் தொழுவங்களை 2 சதவீதம் காஷ்டிக் சோடா கரைசல் அல்லது 4 சதவீதம் வாஷிங் சோடா கொண்டு கழுவ வேண்டும்.

நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் மீதம் செய்த தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றை எரித்து விட வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios