கால்நடைகளுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமானது? அவற்றிற்கு தண்ணீர் எவ்வாறு உதவுகிறது? தெரிஞ்சுக்குங்க...
எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது. கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று. உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே. உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும். ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது.
கால்நடைகளுக்கு தண்ணீரின் அவசியம்:
** கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது. உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் உள்ளது.
** நீரானது உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையுமே சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
** உடலின் ஒவ்வொரு உறுப்பும் நல்ல முறையில் செயலாற்ற உதவுகிறது.
** நீரானது, உணவு உட்கொள்ளுதல் செரித்தல் மற்றும் செரித்த உணவிலிருந்து தேவையான சத்துப்பொருட்களை இரத்தத்தில் சேர்த்தல் போன்ற வேலைகளுக்கு மிகவும் அவசியமாகிறது.
** அதேபோல் உடம்பிலுள்ள தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது மேலும், உடம்பின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
** உடம்பின் செல்களில் உள் மற்றும் வெளியில் உள்ள திரவத்தின் [intra and extra cellular Fluids] pH அழுத்தம் மற்றும் முக்கியமான உப்புச் சத்துக்கள் ஆகியவற்றால் சீரான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.
** கால்நடைகள் உட்கொள்ளும் நீரானது, குடிநீர், தீவனத்தில் உள்ள நீர் மற்றும் உணவுப்பொருட்கள் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது உண்டாகும் நீர் [Metabolic Water] என மூன்று வழிகளில் கிடைக்கிறது.
** பசுந்தீவனங்களில் 75-90% நீரும் வைக்கோல் போன்ற பொருட்களில் 10-15% நீரும் உள்ளது. 100 கிராம் புரதம் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 42 கிராம் நீரும், 100 கிராம் கொழுப்புச் சத்து ஆக்சிஜனேற்றம் அடையும்போது 100 கிராம் நீரும், 100 கிராம் கார்போஹைட்ரேட் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 60 கிராம் நீரும் கிடைக்கிறது.