தென்னையில் சொட்டுநீர் மூலமாக உர மேலாண்மையை எப்படி செய்வது/
தென்னையில் சொட்டு நீர்வழி உர மேலாண்மை:
தென்னை நீண்டகால பயிராக இருப்பதாலும் தொடர்ந்து விளைச்சல் கொடுப்பதாலும் வருடம் முழுவதும் நீர் உரத் தேவை ஏற்படுகிறது.
மரம் ஒன்றுக்கு தழைச்சத்து 560 கிராம், மணிச்சத்து 320 கிராம், சாம்பல் சத்து 1200 கிராம் தேவைப்படும்.
உரங்கள்: (கிலோகிராமில்)
1.. யூரியா – 74 கி.கி (மரம் ஒன்றுக்கு 0.5கிலோ)
2.. சூப்பர் பாஸ்பேட் – 312 கி.கி (மரம் ஒன்றுக்கு 2 கிலோ)
3.. மியூரியேட் ஆப் பொட்டாஷ் – 416 கி.கி (மரம் ஒன்றுக்கு 2.6 கிலோ)
இளம் மரங்களுக்கான உர அளவுகள்:
நட்ட 3 மாதத்திற்குபிறகு – 10ல் ஒரு பங்கு அளவு,
இரண்டு ஆண்டு மரத்திற்கு – 3ல் ஒரு பங்கு அளவு,
மூன்று ஆண்டு மரத்திற்கு – 3ல் 2 பங்கு அளவு,
நான்கு ஆண்டு மரத்திற்கு – முழு அளவு.
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேம் ஆகியவற்றை 50 கிராம் என்ற அளவில் எடுத்து தேவையான அளவு தொழு உரத்துடன் கலந்து 6 மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.
தென்னை ஊக்க மருந்து:
தென்னையில் குரும்பை உதிர்வதைத் தடுக்கவும் காய்களின் அளவை அதிகரிக்கவும் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஊக்கமருந்தினை தயாரித்துள்ளது. இதனை ஆண்டிற்கு இரண்டு முறை 6 மாத இடைவெளியில் மரம் ஒன்றுக்கு 200 மிலி என்ற அளவில் 1:4 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து வேர் மூலம் செலுத்தப்படுகிறது.
இந்த ஊக்கமருந்தின் சிறப்பியல்புகள்:
இலைகளில் பச்சையத்தின் அளவு அதிகரித்தல்,
ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரித்தல்,
குரும்பை உதிர்வதைத் தடுத்தல்,
காய்களின் எண்ணிக்கை, அதன் அளவை அதிகப்படுத்துதல்,
காய்களின் விளைச்சலை 20 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்தல்,
வாழ்நாள் மரத்தின் வீரியத்தை அதிகப்படுத்துதல்,
நோய், பூச்சி, தட்பவெப்ப காரணிகளை எதிர்கொள்ளும் திறன் போன்றவை இதன் சிறப்பியல்புகளாகும்.