வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனங்கள் சிலவற்றை இங்கே காணலாம்; அவ்வளவும் ரொம்ப நல்லதுங்க...
தானிய வகைகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நவ தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலிவாக இருக்கும் தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நெல் மட்டும் விளையும் பகுதியில் அரிசி நொய் சேர்த்துக் கொள்ளலாம்.
யாவருமே அரிசியையே விரும்பி உண்ணத் தொடங்கிய சூழ்நிலையில் நவ தானியங்களைக் கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை சிறந்தவை.
இது தவிரப் பயறு வகைகளில் கொள்ளு (காணம்) பொதுவாக மலிவான விலையில் கிடைப்பதால், இதனையும் அரைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். இதன் காரணமாகப் பிண்ணாக்கு அளவைக் கலப்பது தீவனத்தில் குறைக்கலாம். எண்ணெய்க்காக எண்ணெய் வித்துக்கள் செக்கில் ஆட்டப்படும்போது கிடைப்பது பிண்ணாக்கு. எல்லாவிதப் பிண்ணாக்கும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனமாகாது.
எல்லாவித எண்ணெயும் மனிதனுக்கு ஆகாததுபோலச் சத்து மிகுந்ததும், நச்சுத் தன்மை அற்றதும், நம் பகுதியில் கிடைப்பதுமான பிண்ணாக்குகள் குறித்துப் பார்க்கலாம். பொதுவாகத் தழையில் கிடைக்காத பாஸ்பரஸ் இவற்றில் அதிகம் கிடைக்கும்.
கடலை பிண்ணாக்கு
இதை பிண்ணாக்குகளின் அரசன் எனலாம். இதில் எவ்வளவு புரதம் உள்ளது. அரசர்களுக்கே ஆபத்தான காலம் இது. இந்தப் பிண்ணாக்கு அரசனுக்கும் ஓர் ஆபத்து. ஈரம் மிகுந்த பகுதியில் சேமிக்கப்படும் அல்லது தரம் குறைந்த வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலைப் பிண்ணாக்கில், அப்ஸோடாக்சின் என்னும் நச்சுப் பொருள் உள்ளது.
இது ஒரு வகைப் பூஞ்சைக்காளானால் (Aspergillus flavus) உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகவே தரமான பிண்ணாக்கு வாங்கி ஈரமற்ற இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஆகவே மிக உயர்ந்த இக்கால்நடைத் தீவனம் அளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் சொல்கிறனேயன்றி வேறல்ல.
பிண்ணாக்கு என்றாலே கடலைப் பிண்ணாக்கே யாவரும் பயன்படுத்துவது, சிறந்தது, புரதம் 44% கொண்டது. மேலும் கடலைப் பிண்ணாக்கு மாடுகள் எருமைகளுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படும் அளவிற்கு வெள்ளாட்டிற்குச் சிறந்ததல்ல என்று கூறும் ஆசிரியரும் உண்டு.
வேர்க்கடலைக் கொடி
கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும். பயிரில் சிவப்புக் கம்பளிப் புழு தாக்குதல், கடலை உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆடுகளுக்குப் பெருந் தீவனப் பஞ்சத்தை உண்டாக்குகின்றது.