விளைச்சலைக் கெடுக்கும் எலிகளை ஒழிக்க எளிய வழிகள் இதோ…
பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் எலிகளை ஒழிப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
மனித இனத்திற்கு பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் முக்கிய எதிரி எலி. பிளேக் உள்பட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாக உள்ளன. எலிகளால் அதிக பாதிப்புக்குள்ளாகும் பயிர் வரிசையில் நெற்பயிர் முதலிடம் வகிக்கிறது.
எலிகள் ஓராண்டுக்கும் மேல் ஆயுள் காலம் கொண்டவை. ஒரு மனிதனுக்குத் தேவையான உணவை 6 எலிகள் உண்ணும்.
உண்பதைவிட 5 மடங்கு உணவுப் பொருளை வீணாக்கும். 150 எலிகள் ஆண்டுக்கு அரை டன் உணவு தானியத்தை வீணாக்குகின்றன.
நெற்பயிரின் தூர்களை வெட்டியும், நெற்கதிர்களைச் சேதப்படுத்தியும், உணவு தானியங்களை தனது வளைக்குள் சேமித்தும் விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பை ஏற்படுத்துகின்றன.
சாகுபடி இல்லாத கோடைப் பருவத்தில் எலிகளை ஒழிப்பதன் மூலம் இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
1.. பெரிய வரப்புகளை சிறியதாக்குதல்,
2.. மறைவிடம் தரும் களைச் செடிகளை அழித்தல்,
3.. கிட்டி வைத்து எலி பிடித்தல்,
4.. எலிகளைப் பிடித்து உண்ணும் ஆந்தை, கோட்டான் போன்ற பறவைகள் அமர்வதற்கு வயல்களில் 10 இடங்களில் 9 அடி உயர இருக்கைகள் அமைத்தல்,
5.. பசை கலந்த அட்டைகளைப் பயன்படுத்துதல்,
6.. சாணம் கலந்த தண்ணீர் பானையைப் புதைத்து எலிகளைக் கவர்தல்,
7.. துத்தநாக பாஸ்பைட், புரோமோடைலான் விஷ கேக் வைத்தல்,
8.. தேங்காய் துருவலுடன் குண்டு பல்பை தூளாக்கி கலந்து வைத்தல்
இதுபோன்ற முறைகளைக் கையாண்டு விளைச்சலைக் கெடுக்கும் எலிகளை ஒழிக்கலாம்.