வெள்ளாட்டு தீவனமான வேலிமசால் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? படிச்சு தெரிஞ்சுக்குங்க...
வேலிமசால் (Hedge Lucerne)
இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம். தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும்.30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை.
கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 1/2 முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும். பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம்.
ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும்.
இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம்.
இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம்.
ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும்.
குறிப்பாக கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும். இந்த ஆடுகள் வழங்கும் எரு நிலத்திற்கும் பயன்படும்.