இயற்கை முறையில் அடைகாக்க பெட்டைக் கோழிகளை உட்கார வைக்கவும் ஒரு நேரம் இருக்கு? விரிவான தகவல் உள்ளே....
** பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது.
** எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்க வேண்டும்.
** அப்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும்.
** அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது.
** அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
** எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.
** மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.
** எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.
** எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.