வேளாண் நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள நிலக்கடலை இரகம்…
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம், புதிய நிலக்கடலை ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் நிலக்கடலையில் அதிக மகசூலை பெறுவதற்காக புதிய ரகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் முதல்நிலை செயல் விளக்கம் மூலம் (டிஎம்வி13) என்ற புதிய நிலக்கடலை ரகத்தை தொகுப்பு முறையில் செயல்படுத்தி வருகிறது.
இத்தொகுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்தில் விவசாயிகள் நிலங்களில் 25 ஏக்கர் தொடர்ச்சியாக, இந்த நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மேல்மலையனூர் வட்டாரத்தில் பெரிய நொலம்பை, சின்ன சேலம் வட்டத்தில் அம்மகளத்தூர், வானூர் வட்டத்தில் காரட்டை ஆகிய இடங்களில், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த புதிய ரகம் அதிக எண்ணெய் சத்து கொண்ட வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பிரதான சாலையோரமாக அமைந்துள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அருகில் உள்ள மற்ற கிராம விவசாயிகளும் புதிய ரகம் மற்றும் சாகுபடி முறையைக்கண்டு விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.