ஏக்கருக்கு 45 மூடைகள் வரை கிடைக்கும் புதிய நிலக்கடலை…
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் நெல், வாழை, தென்னை ஆகியவை விவசாயம் செய்யப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, சில ஆண்டுகளாக கிணறுகள் வறண்டதால் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள இங்குள்ள விவசாயிகள் வாழ்வு என்னாகும் என்ற கவலை அனைத்து விவசாயிகள் தொற்றிக் கொண்டுள்ளது.
“அழுதுகொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு” என்ற பழமொழியை மனதில் கொண்டு அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளனர் இங்குள்ள விவசாயிகள்.
மானாவாரி நிலத்திற்கு என்ன பயிரிடலாம் என விவசாய துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு அதன்படி காலத்திற்கு ஏற்ப மொச்சை, உளுந்து, தட்டாம் பயறு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். ஆனால் அவற்றிலும் எதிர்பார்த்த வரவு இல்லை.
மனம் தளராமல் தொடர்ந்து நிலத்திற்கான பயிரை ஆய்வு செய்து தேடிக் கொண்டிருந்தபோது மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்ட ‘டி.ஜி.37.ஏ.’ என்ற வகை நிலக்கடலை பயிர் வறட்சியையும், கடுமையான நோய் தாக்குதலையும் எதிர்கொண்டு வளரும் என்ற தகவலையும், அது காந்தி கிராம பல்கலை கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செய்தியையும் அறிந்து அங்கு சென்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட மண்ணுக்கு இது ஏற்றதா என்பதை அதிகாரிகள் அறியவேண்டி, அவருக்கு அந்த நிலக்கடலை விதைகளை வழங்கினர்.
அதனை வாங்கி பருவமழை பெய்த காலத்தில் பயிரிட்டு தினமும் அதன் வளர்ச்சியை கவனித்து வந்துள்ளனர். ஒருமுறை கூட அவர்கள் தண்ணீர் பாய்ச்சவில்லை.
நோய் தாக்குதல் மற்ற பயிர்களில் இருந்தபோதும் இவ்வகை கடலை பயிர்களில் நோய் தாக்கவில்லை.
108 நாட்களில் அவர் எதிர்பார்த்ததை விட பன் மடங்காக மகசூல் கிடைத்தது.
அதாவது மற்றவகை நிலக்கடலைகள் ஏக்கருக்கு 22 முதல் 30 மூடைகள் கிடைக்கின்றன. ஆனால் இவ்வகை புதிய நிலக்கடலை ஏக்கருக்கு 45 மூடைகள் வரை கிடைத்தது.
இப்பயிரின் தண்டுப்பகுதி தடிமனாக இருப்பதால், அதில் நீரை வாங்கி வைத்துக் கொண்டு மகசூல் தரும் வரை, அந்த நீரையே பயன்படுத்தி வளர்கிறது. தண்டுப் பகுதி திடமாக இருப்பதால் நோய்களை எதிர்த்து நிற்கிறது.
மற்ற கடலை பயிர்களை கணக்கிடும்போது ஒரு ஏக்கருக்கு 28 ஆயிரம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
வழக்கமாக ஒரு புதுரகம் அறிமுகப்படுத்தப்படும்போது அதை பயிரிட எல்லா விவசாயிகளும் தயங்குவதுண்டு. ஆனால் நான் நம்பிக்கையோடு தைரியமாக விதைத்தால் மானாவாரி நிலங்களுக்கு இது வரப்பிரசாதம் என்பதை அறியலாம்.