காளாண் வளர்ப்பு பற்றி முழு அலசல் - அறுவடை, வருமானம் அனைத்து தகவலும் உள்ளே...
காளாண் வளர்ப்பு
'சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும்.
இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும்.
இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும்.
காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
விதை மற்றும் வைக்கோல்
அறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும்.
இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும்.
ஒரு படுகை தயாரிக்க, 200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில்.
அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும்.
அறுவடை!
படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும்.
ஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.
முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான்.
இந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம்.
கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும்.