"விவசாயிகள் பழைய நோட்டுக்கள் மூலமாகவே விதைகள் வாங்கலாம்" - மத்திய அரசு
மத்திய, மாநில அரசின் விதை பண்ணைகளில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மூலமாகவே விவசாயிகள் விதைகள் வாங்கலாம் என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த வாரம் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், நாட்டு மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ஏ.டி.எம்., மையங்களிலும், வங்கி வாசல்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பழைய நோட்டுக்களை அரசு வரிகள், மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் இந்த நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த திடீர் அறிவிப்பால், நாட்டில் வியாபாரம் பல இடங்களில் முடங்கிய நிலையிலே உள்ளன. அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் பெரிதும் தவிக்கின்றனர். இந்நிலையில், மத்திய, மாநில அரசின் விதை பண்ணைகளில் இருந்து, விவசாயிகள் விதைகளை வாங்குவதற்கு இந்த பழைய நோட்டுக்களை பயன்படுத்திகொள்ளலாம் என மத்திய அரசின் நிதித்துறை பொருளாதார செயலாளர் சக்தி காந்தாதாஸ் தெரிவித்துள்ளார்.