இன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளே சில ஆயிரம் கோழி குஞ்சுகள், அதற்கு உணவாக பரிமாற ரசாயன உணவுகள். 

மேலும் அதனுடைய வளர்ச்சியை இயற்கைக்கு மாறாக ஊக்குவிக்க சில ரசாயன மருந்துகள், மேலும் செயற்கையாக குஞ்சு பொரிக்க வைக்கவும் கோழி குஞ்சுகளுக்கு இதமான சூட்டினை கொடுத்து கொண்டிருக்கவும் சில மின் இயந்திரங்கள். 

இப்படி ஒரு கோழி பண்ணை அமைப்பதற்கு எப்படியும் சில இலட்சங்களை செலவு செய்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அப்படி செயல் படுத்தினாலும் இதிலிருந்து வளரும் கோழிகள் ரசாயன தீவனம் கொடுத்து வளர்க்கபட்டதால், கோழியின் மாமிசத்தை உண்ணும் பொழுது எதோ ஒரு பக்கவிளைவினை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. 

மேலும் நாட்டு கோழிகளை ஒப்பிடும் பொழுது இவ்வாறு வளர்க்கப்படும் பிராயிளர் கோழிகளிடம் ருசியும் இருப்பதில்லை, சத்தும் இருப்பதில்லை. கோழி வளர்ப்பு என்ற பெயரில் இங்கு கோழி உற்பத்தி மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

இயற்கை விவசாயம் என்பது விளைவிக்கும் உணவில் மட்டுமே முடிந்து விடக்கூடிய ஒன்றாக இல்லாமல் வளர்க்கக்கூடிய கால்நடைகளிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

வளர்ப்பு செலவு குறைய வேண்டும், வளர்க்கப்படும் கோழி உண்பவனுக்கு எந்த ஒரு பக்கவிளைவினையும் கொடுக்க கூடாது, மேலும் உண்பவர்க்கு நல்ல சத்துள்ள உணவாக அது இருக்க வேண்டும். 

இந்த மூன்று இலக்கையும் அடைய வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கையில், நான் அறிந்த இயற்கையினை கொண்டு வகுத்து வைத்துள்ள திட்டம் இது. இதனை செயல்முறை படுத்த தற்போது எனக்கு நேரமில்லை. 

இருந்தாலும் இதை படித்துவிட்டு முயன்று பாருங்கள் நண்பர்களே. திட்டத்திற்குள் செல்வதற்கு முன்பு இயற்கையின் உயிர் சுழற்சி, உணவு சங்கிலி, நீர் சுழற்சி என மூன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

இயற்கையின் உணவு சங்கிலியை நன்கு உற்று நோக்கினால் உங்களுக்கு ஒன்று நன்றாக புரியும், அதாவது இந்த மண்ணில் வாழும் அணைத்து உயிரும் இன்னொரு உயிரை தான் தன்னுடைய உணவிற்காக சார்ந்து இருக்கும் அவை தாவரங்களாக இருக்கலாம், அல்லது வேறு உயிர்களாக இருக்கலாம்.

இந்த பூமியில் மழை பெய்வதற்கான காரணம், அதாவது நீர் இந்த மண்ணில் விழுவதற்கான காரணம் இந்த மண்ணில் உயிர் பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இயற்கையின் ஆற்றல். நன்கு கவனித்து பாருங்கள், மழை காலங்களில் பூச்சிக்களையும், பறவைகளையும், கண்ணுக்கு தெரியாத மண்ணில் வாழும் நுண்ணுயிர்களையும் அதிக எண்ணிக்கையில் காண முடியும். 

இந்த மண்ணில் நீர் விழுந்தால், அது ஈரம் அடைந்தால் அங்கு நுன்னியிர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்படி அதிகமாகும் பொழுது அதனை சார்ந்திருக்கும் மற்ற உயிர்களான பூச்சி, புழு, சிறு தாவரங்கள், கரையான் என பல்லுயிர் பெருக்கம் அங்கு நடக்கும். 

இதன் மூலம் உணவு பொருட்களின் விளைச்சலும் அதிகம் ஆகும். தாவர உணவை சார்ந்திருக்கும் மற்ற பெருயிர்களும் வாழும், அதன் வழியே அதனுடைய எண்ணிகையும் பெருகும்.

இந்த இரண்டு புரிதலை கொண்டு பார்க்கும் பொழுது அறிந்தது, ஒரு உயிருள்ள கோழி வளர்வதற்கு தேவையானது ரசாயன உரங்கள், குடில்களும், மின் இயந்திரங்களும் இல்லை. ஒரு உயிர் வளர்வதற்கு தேவை மற்றொரு உயிர் தான். 

வயலில் மேயும் கோழிகளை நீங்கள் பார்த்திருக்கலாம், அது உணவாக எடுத்து கொள்வது அங்குள்ள சிறு செடிகளையும், பூச்சி புழுக்களை தான். ஆகவே சிறு செடிகள், பூச்சி, புழு, கரையான் ஆகிய உயிர்களின் எண்ணிக்கையினை அதிகபடுத்திவிட்டால் கோழிக்காண உணவு கிடைத்து விடும். 

கோழியின் இந்த நேரடி உணவுகள் சார்ந்திருப்பது மண்ணில் வாழும் நுன்னுயிரையும், மண்ணில் உள்ள ஈரப்பதத்தையும் தான். ஆக நீர் தான் அணைத்து உயிர் வளர்ச்சிக்கும் ஒரே தேவை.