பூக்கள் உதிர்வதை தடுக்க உதவும் தேங்காய் பால் கடலை புண்ணாக்கு கரைசல்...
தேங்காய் பால் கடலை புண்ணாக்கு கரைசல் அணைத்து பயிர்களிலும் பூக்கள் உதிர்வதை தடுக்க பயன்படுத்த படுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் 30 லிட்டர் தண்ணீருடன் கலந்து அடிப்பதற்கு.
தேவையான பொருட்கள்:
1. ஒரு தேங்காய் முற்றியது (நடுத்தர அளவு).
2. கால் கிலோ கருப்பு வெள்ளம்.
3. கால் கிலோ கடலை புண்ணாக்கு.
4. 20ml தயிர்.
5. 2 வாழைப்பழம்.
செய்முறை:
தேங்காயை உடைத்து தண்ணீர் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி அல்லது கிரைண்டர் (ஆட்டுக்கல் இருந்தால் உபயோகிக்கலாம்) அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்.
பால் எடுப்பதற்கு சேகரித்து வைத்த தேங்காய் நீரை உபயோகப்படுத்துங்கள், தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு கலந்து கொள்ளலாம். 2 வாழைப்பழத்தை கூழாக கரைத்துவிடுங்கள்.
ஒரு 5லிட்டர் அளவுள்ள பாத்திரத்தில் வெள்ளம் மற்றும் கடலை புண்ணாக்கை நன்கு தூளாக்கி தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். தயிரை இந்த கலவையுடன் கலந்து கொள்ளுங்கள். இதனுடன் 2-3 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை 24 மணி நேரம் நிழல் பாங்கான இடத்தில் வைத்துவிடுங்கள். 24 மணிநேரம் கழித்து பார்க்கும்பொழுது நல்ல வாசனை வரும். தேவையென்றால் 2 - 3 நாட்கள் வைத்திருந்தும் உபயோகிக்கலாம்.
உபயோகிக்கும் முறை:
இந்த கரைசலை நன்கு வடிகட்டி கொள்ளுங்கள். 15 லிட்டர் அளவு கொண்ட ஸ்பிரேயரில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி கரைசலை கலந்து கொள்ளுங்கள். பிறகு ஸ்பிரேயரில் மீதி தண்ணீரை நிரப்புங்கள்.
பூக்கள் வந்தவுடன், மோட்டார் ஸ்பிரேயராக இருந்தால் வேகத்தை குறைத்து வைத்து ஸ்பிரே பண்ணலாம். பேட்டரி ஸ்பிரேயரில் அப்படியே ஸ்பிரே பண்ணலாம். மாலை வேளையில் ஸ்பிரே செய்வது சிறந்தது.
பயன்கள்:
பூக்கள் உதிர்வதை தடுக்கிறது.
அதிக படியான பிஞ்சுகள் வருவதற்கு உதவி புரிகிறது.
நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிக்கும்.
இதன் வாசனை தேனீக்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை கவர்வதால் மகரந்த சேர்க்கை அதிகளவில் நடைபெறும்.